திண்டுக்கல்லில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழை


திண்டுக்கல்லில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழை
x
தினத்தந்தி 1 Oct 2021 4:40 PM GMT (Updated: 1 Oct 2021 4:40 PM GMT)

திண்டுக்கல்லில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழையால் மின்கம்பம், மரங்கள் சாய்ந்து விழுந்தன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழையால் மின்கம்பம், மரங்கள் சாய்ந்து விழுந்தன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொட்டித்தீர்த்த மழை
திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு மேல் லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் நேரம் செல்லச்செல்ல பலத்த மழையாக மாறியது. சுமார் 40 நிமிடங்கள் இந்த மழை நீடித்தது. அதன் பின்னர் விட்டு, விட்டு மழை பெய்தது. சாரல், பலத்த மழை என மாறி, மாறி பல மணி நேரம் இந்த மழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக திருச்சி சாலை, பஸ் நிலைய சாலை, ரெயில் நிலைய சாலை என நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
அப்போது தண்ணீரில் சீறிப்பாய்ந்து வாகனங்கள் சென்றன. பலத்த மழை காரணமாக திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதி, தெய்வசிகாமணிபுரம் ஆகிய இடங்களில் சாலையோரத்தில் இருந்த 2 மரங்கள், 2 மின்கம்பங்கள் சாய்ந்து கீழே விழுந்தன. நல்லவேளையாக அப்போது அப்பகுதிகளில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. இதனால் பெரும் விபத்து ஏற்படுவது தடுக்கப்பட்டது. பின்னர் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வெட்டி அகற்றம்
பின்னர் நேற்று காலையில் மேட்டுப்பட்டி, தெய்வசிகாமணிபுரம் ஆகிய பகுதிகளில் விழுந்து கிடந்த மரங்களை தீயணைப்பு துறையினர் வெட்டி அகற்றினர். மேலும் சாய்ந்து விழுந்த மின்கம்பங்களும் சீரமைக்கப்பட்டு வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. சீரமைப்பு பணிகள் நடக்கும் போதே லேசான சாரல் மழை விட்டு, விட்டு பெய்தது. அதையும் பொருட்படுத்தாமல் தீயணைப்பு படையினரும், மின்வாரிய ஊழியர்களும் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.
இதேபோல் மாவட்டத்தில் பழனி, கொடைக்கானல், நத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி திண்டுக்கல்லில் 78.8 மில்லி மீட்டர், நத்தத்தில் 107 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 564.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.
பாம்புகள் நடமாட்டம் 
இதனிடையே மழை காரணமாக பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் திண்டுக்கல்லை அடுத்த சிறுநாயக்கன்பட்டி அருகே உள்ள மூர்த்திநாயக்கன்பட்டியை சேர்ந்த கணேசன் (வயது 52) என்பவரின் வீட்டுக்குள் புகுந்த பாம்பு அவரை கடித்தது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் சில மணி நேர இடைவெளிக்கு பிறகு திண்டுக்கல்லை அடுத்த கோட்டூர் ஆவாரம்பட்டியை சேர்ந்த தனலட்சுமி (38) என்பவர் பாம்பு கடிக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரை தொடர்ந்து ராஜதானிக்கோட்டையை சேர்ந்த பாண்டியம்மாள் (60), செங்குறிச்சியை சேர்ந்த தனலட்சுமி (32), ராமையன்பட்டியை சேர்ந்த பாத்திமாமேரி (37), சென்னமநாயக்கன்பட்டியை சேர்ந்த ஞானவெங்கட்ராஜ் (30), எமக்கலாபுரத்தை சேர்ந்த சந்தோஷ் (12), கோபால்பட்டியை சேர்ந்த தேவதாஸ் (65) என காலை 11 மணி வரை அடுத்தடுத்து 7 பேர் பாம்பு கடி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Next Story