புகாா் பெட்டி

தினத்தந்தி புகாா் பெட்டி
சரி செய்யப்படாத சாக்கடை கால்வாய்
அந்தியூர் தாலுகா பிரம்மதேசம் கிராமம் பெத்தராண்ணன் கோவில் பஸ் நிறுத்தும் அருகில் சாக்கடை கால்வாய் உள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சாலை விரிவாக்க பணிக்காக அந்த சாக்கடை கால்வாய் இடிக்கப்பட்டது. சாலை விரிவாக்க பணிகள் முடிந்து ஒரு ஆண்டு ஆகிவிட்ட நிலையிலும் சாக்கடை கால்வாய் இதுவரை சரி செய்யப்படவில்லை. இதனால் சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்குவதுடன், கொசு உற்பத்தியாகி உள்ளது. இதன்காரணமாக அந்த பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பிரம்மதேசம்.
------
இடிந்து விழும் நிலையில் கிராம நிர்வாக அலுவலகம்
கோபி வட்டத்துக்கு உள்பட்ட அளுக்குளி கிராம நிர்வாக அலுவலகத்தின் மேற்கூரை பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் நீர்கசிவு ஏற்படுகிறது. கட்டிடம் இடிந்து விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் அந்த அலுவலகத்தில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. கட்டிடத்தை சீர் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், அளுக்குளி.
------
சாலையில் தேங்கிய கழிவுநீர்
ஈரோடு ஒன்றியம் பேரோடு ஊராட்சி 5-வது வார்டில் கரட்டுப்பாளையம் தார் சாலையில் சாக்கடை தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் சாக்கடை கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த சாலையில் பொதுமக்கள் நடமாட முடியவில்லை. மேலும் கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவிந்தராசு, கரட்டுப்பாளையம்.
---------
தெருவிளக்குகள் வேண்டும்
கோபி தாலுகா சிறுவலூர் கிராமத்தில் உள்ள கோல்டன் சிட்டி சக்தி நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். எங்கள் பகுதியில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் இரவு 7 மணி ஆகிவிட்டால் தெருக்களில் அச்சத்துடன் நடக்க வேண்டி உள்ளது. இதனால் எங்கள் பகுதியில் தெருவிளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சங்கர், சிறுவலூர்.
-----
சாக்கடை சீர் செய்யப்படுமா?
கொடுமுடி பேரூராட்சிக்கு உள்பட்ட எஸ்.என்.பி. நகர் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் பழுதடைந்து உள்ளது. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. தற்போது மழை பெய்து வருவதால் மழைநீருடன், சாக்கடை கழிவுநீரும் கலந்து செல்கிறது. இதனால் அந்த பகுதியில் நோய்த்தொற்று அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை சீர் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கொடுமுடி.
-------
Related Tags :
Next Story






