தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 1 Oct 2021 5:05 PM GMT (Updated: 1 Oct 2021 5:05 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டி

திண்டுக்கல்:
‘தினத்தந்தி’புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மூடி கிடக்கும் கழிப்பறை
தேனி மாவட்டம் ஊஞ்சம்பட்டி ஊராட்சி 4-வது வார்டில் ஆண்களுக்கான கழிப்பறை கட்டப்பட்டு பல மாதங்களாகி விட்டது. எனினும் இதுவரை அது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் மூடிக்கிடக்கிறது. இதனால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே, கழிப்பறையை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். -இளையராஜா, ஊஞ்சம்பட்டி.
சாலையில் ராட்சத பள்ளம்
தேனி-பூதிப்புரம் சாலையில் பழனிசெட்டிபட்டி பிரிவு அருகே கழிவுநீர் கால்வாய் தடுப்புச்சுவர் சேதம் அடைந்து உள்ளது. அதேபோல் சாலையில் ராட்சத பள்ளம் காணப்படுகிறது. இரவில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தடுமாறி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். அதை தவிர்க்க தடுப்புச்சுவர், சாலையில் உள்ள பள்ளத்தை சரிசெய்ய வேண்டும். 
-ராஜேஷ்கண்ணா, பழனிசெட்டிபட்டி.
அடிப்படை வசதிகள் தேவை 
திண்டுக்கல்லை அடுத்த கொட்டப்பட்டி கல்பனாசாவ்லா பகுதியில் சாலை, சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முறையாக செல்லாமல் ஆங்காங்கே தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மழைக்காலத்தில் நடுத்தெருவில் கழிவுநீரும், மழைநீரும் செல்கிறது. பொதுமக்களின் சிரமத்தை போக்குவதற்கு சாலை, சாக்கடை கால்வாய் வசதி செய்துதர வேண்டும். 
-மணி, கொட்டப்பட்டி.
மரத்தை அப்புறப்படுத்த வேண்டும் 
சின்னமனூர் அருகே உள்ள சீப்பாலக்கோட்டையில் கோவில் அருகே பழமையான மரம் பட்டுவிட்டது. பலத்த காற்று, மழை பெய்யும் நேரத்தில் மரம் விழுந்து விடும் அபாயம் உள்ளது. அதற்குள் மரத்தை அப்புறப்படுத்த வேண்டும். 
-அழகன், சீப்பாலக்கோட்டை.
தொடர் மின்தடையால் அவதி 
ஆத்தூர் தாலுகா வீரக்கல் அருகே உள்ள கூத்தம்பட்டியில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் மாணவர்கள் படிக்க முடியவில்லை. மேலும் தேவைப்படும் நேரத்தில் வீடுகளில் மின்சாதன பொருட்களை இயக்க முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே மின்தடையை போக்கி சீராக மின்சாரம் வினியோகிக்க வேண்டும். -புகழேந்தி, கூத்தம்பட்டி.
தெருவிளக்குகள் பொருத்த வேண்டும் 
பெரியகுளம் தாலுகா கெங்குவார்பட்டியை அடுத்த ஜி.கல்லுப்பட்டி மங்கம்மாள் சாலையில் தேவையான அளவு தெருவிளக்குகள் இல்லை. இரவில் பல பகுதிகள் இருளில் மூழ்கி விடுகின்றன. மேலும் விஷப்பூச்சிகள் நடமாடுவதால் மக்கள் சிரமத்துடன் நடமாடும் நிலை உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி தேவையான அளவு தெருவிளக்குகளை பொருத்த வேண்டும். 
-கணேசன், ஜி.கல்லுப்பட்டி.
நடுத்தெருவில் மின்கம்பம் 
குஜிலியம்பாறை தாலுகா பாளையம் அருகே முத்தம்பட்டியில் நடுத்தெருவில் மின்கம்பம் உள்ளது. இதனால் வாகன போக்குவரத்துக்கு மிகுந்த இடையூறாக உள்ளது. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். எனவே ஆபத்தான மின்கம்பத்தை தெருவின் ஓரத்தில் மாற்றி நடவேண்டும். 
-ஆறுமுகம், குஜிலியம்பாறை.
விபத்தை ஏற்படுத்தும் மண்
வத்தலக்குண்டுவில் மதுரை மெயின்ரோட்டில் பாதி அளவுக்கு மணல் பரவி கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சறுக்கி விழுந்து விடுகின்றனர். மேலும் வாகனங்களில் பிரேக் போட்டாலும் அந்த இடத்தில் நிற்பதில்லை. அதுவும் விபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே, சாலையில் கிடக்கும் மண்ணை அகற்ற வேண்டும். 
-நோவா, வத்தலக்குண்டு.

Next Story