மூதாட்டியை கட்டிப்போட்டு நகை-பணம் கொள்ளை


மூதாட்டியை கட்டிப்போட்டு நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 1 Oct 2021 5:41 PM GMT (Updated: 1 Oct 2021 5:41 PM GMT)

புஞ்சைபுளியம்பட்டி அருகே மூதாட்டியை கட்டிப்போட்டு நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

புஞ்சைபுளியம்பட்டி அருகே மூதாட்டியை கட்டிப்போட்டு நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
மூதாட்டி
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள கோவில் புதூர் சவாரி கவுண்டர் தோட்டத்தை சேர்ந்தவர் துளசியம்மாள் (வயது 75). இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்துக்கொண்டு விவசாயம் செய்து வருகிறார்.
 இவருடைய மகன் மோகனசுந்தரம். இவர் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள டானா புதூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் துளசியம்மாள் கழிப்பறை செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர் துளசியம்மாளை வாயை பொத்தி, கழிப்பறைக்கு தூக்கிச்சென்றார்கள். பின்னர் அவர் அணிந்திருந்த சேலையை கிழித்தே அவரின் கை, கால்களை கட்டினார்கள். 
நகை-பணம் கொள்ளை
அதன்பின்னர் துளசியம்மாள் கழுத்தில் போட்டிருந்த சங்கிலி, வளையல், கம்மல் என 5 பவுன் நகையையும் மர்ம நபர்கள் பறித்தார்கள். 
மேலும் வீட்டுக்குள் இருக்கும் பீரோவின் சாவி எங்கு உள்ளது என்று மிரட்டினார்கள். துளசியம்மாள் இடத்தை சொன்னதும், உள்ளே சென்று சாவியை போட்டு நீக்கி பீரோவில் இருந்து ரூ.15 ஆயிரத்தையும் எடுத்துக்கொண்டு வெளியே தப்பிச்சென்றார்கள்.  கொள்ளையர்கள் சென்றபின்னர், கழிப்பறையில் இருந்து மெல்ல மெல்ல தவழ்ந்து வெளியே வந்த துளசியம்மாள் காப்பாற்றுங்கள, காப்பாற்றுங்கள் என்று கத்தினார். 
வலைவீச்சு
சத்தம்கேட்டு அருகே உள்ள தோட்டத்தில் இருந்து பொதுமக்கள் ஓடிவந்து துளசியம்மாளின் கை, கால் கட்டுகளை அவிழ்த்துவிட்டார்கள். பிறகு மோகனசுந்தரத்துக்கு தகவல் கொடுத்தார்கள். 
பதறிஅடித்து வந்த மோகனசுந்தரம் இதுபற்றி புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் மூதாட்டியை கட்டிப்போட்டு நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story