தெருநாய்கள் கடித்து 7 ஆடுகள் பலி

சித்தோடு அருகே தெருநாய்கள் கடித்து 7 ஆடுகள் பலியாகின.
சித்தோடு அருகே உள்ள கங்காபுரம் மேட்டையன்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் பழனிச்சாமி (வயது 40). ராமன் (35). விவசாயிகளான இவர்கள் ஆடுகள் வளர்த்து வருகின்றனர். இந்த ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு நேற்று முன்தினம் தங்கள் வீடுகளின் முன்புள்ள பட்டியில் கட்டி வைத்திருந்தனர். அவர்கள் நேற்று காலை பட்டிகளுக்கு சென்று பார்த்தபோது அதில் 7 ஆடுகள் இறந்து கிடந்தன. 3 ஆடுகள் ரத்த காயத்துடன் கிடந்தது. நேற்று முன்தினம் இரவு மழை பெய்து கொண்டிருந்தபோது பட்டிக்குள் அந்த பகுதி தெருநாய்கள் புகுந்துள்ளன. பின்னர் அங்கு கட்டப்பட்டிருந்த ஆடுகளை கடித்து குதறியதில் 7 ஆடுகள் இறந்துள்ளன. 3 ஆடுகள் படுகாயம் அடைந்தது தெரியவந்தது.
இதுபற்றி அறிந்ததும் தயிர்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் அங்கு சென்று, இறந்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டார். மேலும் படுகாயம் அடைந்த 3 ஆடுகளுக்கு அருகே உள்ள கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆடுகளைக் கடித்து குதறும் தெருநாய்களைப் பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story






