மண் அள்ளிய குழியில் தவறி விழுந்து பள்ளி மாணவி சாவு


மண் அள்ளிய குழியில் தவறி விழுந்து பள்ளி மாணவி  சாவு
x
தினத்தந்தி 1 Oct 2021 7:04 PM GMT (Updated: 1 Oct 2021 7:04 PM GMT)

தோகைமலை அருகே மண் அள்ளிய குழியில் தவறி விழுந்து பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார். இதனால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தோகைமலை
பள்ளி மாணவி
கரூர் மாவட்டம், தோகைமலை காவல் சரகத்திற்குட்பட்ட ஆர்டிமலை ஊராட்சி அழகாபுரியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி இந்திராணி. இவர்களது மகள் லோகேஸ்வரி (வயது 12). இவர் ஆர்டிமலை பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளிகள் விடுமுறை என்பதால் லோகேஸ்வரி தனது தாயாருடன் ஆடு மேய்ப்பதற்கு உதவியாக சென்று வந்துள்ளார். 
இந்தநிலையில் நேற்று வழக்கம்போல் இந்திராணி அழகாபுரி அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தரிசு காட்டில் ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றுள்ளார். அப்போது லோகேஸ்வரியும் உடன்சென்றார். அப்போது ஆடுகள் தரிசு காட்டு பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது.
மூழ்கி சாவு
இந்தநிலையில் ஏற்கனவே தரிசுகாட்டில் கிராவல் மண் அள்ளி 10 அடி ஆழம் கொண்ட குழி தோண்டப்பட்டு இருந்துள்ளது. இதில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் அந்த குழியில் மழைநீர் நிரம்பி இருந்தது. அப்போது ஆடுகள் குழியில் தவறி விழுந்து விடுமோ என்று தடுப்பதற்காக லோகேஸ்வரி ஆடுகளை வழிமறித்து சென்றுள்ளார். 
அப்போது எதிர்பாராத விதமாக குழியில் மண்சரிவு ஏற்பட்டு லோகேஸ்வரி தவறி விழுந்து அந்த மழைநீரில் தத்தளித்தார். இதைக்கண்ட அங்கிருந்த வாலிபர்கள் ஓடி வந்து மழைநீரில் மூழ்கிய லோகேஸ்வரி காப்பாற்றுவதற்குள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் பரிதாபமாக இறந்தார்.
சாலைமறியல்
இதனால் ஆத்திரமடைந்த லோகேஸ்வரியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அனுமதி இல்லாமல் தரிசு காட்டில் கிராவல் மண் அள்ளிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கரையூரான் கோவில் பிரிவு ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை ஆர்டிஓ (பொறுப்பு) தட்சிணாமூர்த்தி, குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர், இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், காசிபாண்டியன் குளித்தலை தாசில்தார் விஜயா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராவல் மண் அள்ளியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்த மாணவியின் பெற்றோருக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். 
போக்குவரத்து பாதிப்பு
இதனைத்தொடர்ந்து தரிசு காட்டில் தோண்டப்பட்ட குழியை ஆய்வு செய்த அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் அதனை மூடினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் காலை 11 மணி முதல் மதியம் 2.30 மணி வரை திருச்சி-மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து, லோகேஸ்வரின் உடலை பிரே பரிசோதனை செய்வதற்காக கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story