தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 1 Oct 2021 8:48 PM GMT (Updated: 1 Oct 2021 8:48 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’க்கு பாராட்டு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவியில் இருந்து பர்கூர் செல்லும் வழியில் 1 கிலோ மீட்டர் தொலைவில் அம்பேத்கர் காலனி அருகில் 2 வேகத்தடைகள் உள்ளன. இந்த வேகத்தடைகள் மீது வெள்ளை வர்ணம் பூசப்படாததால், அந்த பகுதியில் வேகத்தடை இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது என்று கடந்த 23-ந் தேதி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து அதிகாரிகளின் நடவடிக்கையால் அந்த பகுதியில் உள்ள வேகத்தடைக்கு வெள்ளை வர்ணம் பூசப்பட்டது. இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், நடவடிக்கை எடுக்க செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி’க்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
===
25 ஆண்டுகளாக குடிநீர் பிரச்சினை
சேலம் அக்கரபாளையம் ஊராட்சி பாலம்பட்டி 9-வது வார்டு கந்தசாமி கோவில் தோட்டம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக காவிரி குடிநீர் வசதி இல்லை. இருசக்கர வாகனத்தில் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவந்தாம்பட்டி பகுதிக்கு சென்று தண்ணீர் பிடித்து வரும் அவல நிலை உள்ளது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் தினமும் தண்ணீர் பிரச்சினையால் அலைய வேண்டிய இருக்கிறது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காவிரி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர் பொதுமக்கள், பாலம்பட்டி, சேலம்.
===
ஆமை வேகத்தில் கழிவுநீர் கால்வாய் பணி
சேலம் மாநகராட்சி 11-வது வார்டு பொன்னம்மாபேட்டை தில்லை நகர் மெயின் ரோடு பகுதியில் சாக்கடை கால்வாய் கட்டும் பணி கடந்த ஒரு மாத காலமாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் சாக்கடை கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதுதொடர்பாக பலமுறை முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஏதாவது நோய் பரவும் முன்பாக இந்த கழிவுநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
-வெங்கடேஷ், பொன்னம்மாபேட்டை, சேலம்.

===
குடிநீரில் கலக்கும் கழிவுநீர்
சேலம் மாவட்டம் கொளத்தூர் பேரூராட்சி பகுதியில் உள்ள சாலையில் குடிநீர் குழாய் உடைந்து காணப்படுகிறது. அந்த பகுதியில் கழிவுநீர் கால்வாயில் இருந்து வெளியேறும் தண்ணீர், உடைந்த குழாய் வழியாக குடிநீரில் கலக்கிறது. இதனால் குடிநீரை குடிக்கும் மக்களுக்கு நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே இந்த குடிநீர் குழாயில் சாக்கடை நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இளங்கோ, கொளத்தூர், சேலம்.
===
தெருநாய்கள் தொல்லை
சேலம் மாவட்டம் மல்லமூப்பம்பட்டி ஊராட்சி சுந்தர் நகர் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் பள்ளி மற்றும் டியூசன் செல்லும் மாணவ-மாணவிகளை துரத்தி செல்கின்றன. மேலும் இரவு நேரங்களில் தெருக்களில் குரைத்து சண்டையிட்டுக்கொண்டும் அந்த பகுதி பொதுமக்களை தூங்கவிடுவதில்லை. சில சமயத்தில் குழந்தைகளை கடித்துவிடுமோ என்ற பயமும் ஏற்படுகிறது. எனவே தெருநாய்களை அப்புறப்படுத்த  அதிகாரிகள்  நடவடிக்கை எடுப்பார்களா?
-வெங்கடாசலம், சுந்தர் நகர், சேலம்.
நோய் பரவும் அபாயம்
சேலம் மாவட்டம் எடப்பாடி க.புதூர் மாரியம்மன் கோவில் பின்புறம் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நடைபாதையில் தேங்கி கிடக்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே அந்த பகுதியில் சாக்கடை கழிவுநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவா, க.புதூர், சேலம்.
====
சுகாதார வளாகம் கட்டும் பணி 
சேலம் வட்டமுத்தாம்பட்டி ஊராட்சி எம்.ஜி.ஆர். நகர் 3-வது வார்டில் பெண்கள், குழந்தைகளுக்கான சுகாதார வளாகம் கட்டும் பணி கடந்த 6 மாதத்திற்கும் மேலாக ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுகாதார வளாகத்தை விரைவில் சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 கா.ராம், வட்டமுத்தாம்பட்டி, சேலம்.
===
மூடப்படாத சாக்கடை கால்வாய்
சேலம் மாநகராட்சி 27-வது வார்டில் ரத்தினசாமிபுரம் 40 அடி சாலையில் சாக்கடை கால்வாய் கழிவுநீர் மற்றும் குடிநீர் பிரச்சினைக்காக பள்ளம் தோண்டப்பட்டன. பல மாதங்களாக இந்த பள்ளம் அப்படியே கிடக்கிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். எனவே அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-பூபதி, ரத்தினசாமிபுரம், சேலம்.
===
குவிந்து கிடக்கும் குப்பைகள்
நாமக்கல் மாவட்டம் 26-வது வார்டு காமராஜர் நகர் பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. மழைக்காலம் என்பதால் குப்பைகளுடன் மழைநீர் கலந்துவிடுகிறது. இதனால் கொசுத்தொல்லை அதிகரித்து நோய் பரவும் அபாயம் உள்ளது. சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி பல முறை தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
-ஊர்மக்கள், நாமக்கல்.

Next Story