மாசு படிந்த குடிநீரை காண்பித்து பொதுமக்கள் வாக்குவாதம்


மாசு படிந்த குடிநீரை காண்பித்து பொதுமக்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 2 Oct 2021 7:23 PM GMT (Updated: 2021-10-03T00:53:21+05:30)

ஆடையூர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மாசு படிந்த குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீப் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை,

ஆடையூர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மாசு படிந்த குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீப் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாசு படிந்த குடிநீர்

திருவண்ணாமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆடையூர் ஊராட்சியில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவர் கலைவாணி முனுசாமி தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் காசிராஜன் முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 
அப்போது அவர்கள் கடந்த சில மாதங்களாக மாசு படிந்த குடிநீர் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. இது குறித்து பல்வேறு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், குடிநீர் சுத்தம் செய்யப்படவில்லை என்றும் கூறி மாசு படிந்த தண்ணீரை சில்வர் பானையில் கொண்டு வந்தனர். இந்த தண்ணீரைத் தான் பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறோம். இதனால் நோய் தொற்று ஏற்படும் நிலை உள்ளது.

வாக்குவாதம்

உடனடியாக அதனை சரி செய்ய வேண்டும் என்று கூறி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் செயலாளர் அவர்களிடம் ஒரு வாரத்திற்குள் குடிநீர் பிரச்சினை சரி செய்து தரப்படும் என்றனர். 
அதனை ஏற்காத பொதுமக்கள், கலெக்டர் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் வர வேண்டும்.  இல்லையென்றால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். 

தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
ஜீப் முன்பு அமர்ந்து                போராட்டம்
தொடர்ந்து அங்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அருணாச்சலம் நேரில் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் ஏரியில் உள்ள கிணற்றில் இருந்து குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்படுகிறது. மழை காலங்களில் ஏரிக்கு தண்ணீர் வந்தால் கிணற்றில் மழை நீர் கலந்து விடுகிறது. 

இதனால் மழை நீர் கலந்து மாசு படிந்த தண்ணீர் ஏற்றப்பட்டு விடுகிறது. அந்த தண்ணீர்தான் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீராக வினியோகிக்கப்படுகின்றது என்றனர். மேலும் மாசு படிந்த தண்ணீரை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் காண்பித்து அதனை நீங்கள் குடித்து காட்டுங்கள் என்றனர். 

ஏரியில் உள்ள கிணற்றை பார்வையிட வேண்டும் என பொதுமக்கள் கூறினர். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் அவரது ஜீப்பில் ஏறி செல்ல முயன்றார்.
ஆனால் பொதுமக்கள் அவரை செல்லவிடாமல் தடுத்து ஜீப் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் 

எங்கள் ஊரில் சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளது அதனை நீங்கள் நடந்து வந்து பார்வையிட்டால் தான் உங்களுக்கு எங்களது சிரமம் தெரியவரும் என்று அவர்கள் கூறினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பார்வையிட்டார்

அப்போது பொதுமக்கள் மழை நீர் தேங்கி இருந்த பகுதியையும், மேடு பள்ளமாக உள்ள சாலையையும் காண்பித்து சாலை வசதி செய்து தர வேண்டும் என்றனர். 

கூட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 1½ கிலோ மீட்டர் தொலைவில் ஏரியில் அமைந்துள்ள கிணறு பகுதிக்கு அவரை பொதுமக்கள் அழைத்து காண்பித்தனர்.
குடிநீர் தொட்டியை பார்வையிட்ட வட்டார வளர்ச்சி அலுவலர், புதிதாக வேறு இடத்தில் ஆழ்துளை கிணறுஅமைத்து குடிநீர் வினியோகம் செய்ய ஊராட்சி செயலாளரிடம் உத்தரவிட்டார். 

Next Story