தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 2 Oct 2021 7:55 PM GMT (Updated: 2 Oct 2021 7:55 PM GMT)

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

நடைபெறாத பணியால் பொதுமக்கள் அவதி 
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி11-வது வார்டு காந்திநகர் அருந்ததியர் தெரு வழியாக செல்லக்கூடிய சாலை பழுதடைந்துள்ளதால் இந்த சாலையை சீரமைக்க சாலையின் நடுவே ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளன. ஆனால் பல நாட்கள் ஆகியும் பணி நடைபெறாமல் உள்ளது. சாலையில் கொட்டப்பட்டுள்ள ஜல்லிக்கற்களால் அப்பகுதி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நடந்து செல்பவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். 
லோகநாதன், காந்திநகர், அரியலூர். 

அறுந்து தொங்கும் மின் வயரால் அச்சம் 
கரூர் மாவட்டம், புகளூர் ஓம் சக்தி நகரில் மின்கம்பம் அமைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் இரவு நேரத்தில் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அந்த மின் கம்பத்தில் தெரு விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த மின்கம்பத்தின் வயர் அறுந்து தொங்குகிறது. இதனால் இரவு நேரத்தில் மின் விளக்கு எரியாததுடன்,  அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
கார்த்தி, புகளூர், கரூர். 

குளத்தில் நடப்பட்டுள்ள மின்கம்பங்கள் 
புதுக்கோட்டை மாவட்டம் வாண்டாக்கோட்டை கிராமத்தில் உள்ள  ஐவர்நதி குளத்தில் மின்கம்பங்கள் நடப்பட்டு அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குளத்தில் மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளதால் நீரில் மின்கம்பங்கள் எப்போது வேண்டுமானாலும் குளத்தில் விழும் நிலையில் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதில் ஒரு சில மின்கம்பங்கள் பழுதடைந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. பலத்த மழை பெய்யும்போது காற்று அடித்தால் இந்த மின்கம்பங்கள் தண்ணீரில் விழுந்து உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
சுபாஷ்சந்திரபோஸ், வாண்டாக்கோட்டை, புதுக்கோட்டை. 

அகற்றப்படாத குப்பைகள், சாக்கடை கழிவுகள் 
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஜூப்ளி ரோட்டில்  உள்ள பதுவநேரி அருகில்  குப்பைகள் கொட்டப்பட்டு நாட்கணக்கில் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதில் பன்றிகள் மேய்ந்து வருவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்காலில் இருந்து  சாக்கடையை அள்ளி சாலையோரத்தில் கொட்டப்பட்டு ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் சுத்தம் செய்யாததால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
சுரோஷ்குமார், ஜெயங்கொண்டம், அரியலூர். 

மின்வெட்டுகளால் கேள்விக்குறியாகும் ஆன்லைன் வகுப்புகள்
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி அண்ணாநகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக முன் அறிவிப்பு இன்றி அடிக்கடி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் ஆன்லைன் வகுப்பு மூலம் படிக்கும் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருவதுடன் அவர்களின் படிப்பு கேள்விக்குறியாகி வருகிறது. மேலும் இரவு நேரத்தில் மின் நிறுத்தம் செய்யப்படுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூக்கம் இன்றி தவித்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
மணிவேல், அண்ணாநகர், கரூர். 

பொதுக்கிணறு பயன்பாட்டிற்கு வருமா? 
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை தாலுகா, ம.வெள்ளாளவிடுதி கிராமத்தில் உள்ள அம்பேத்கர் தெருவில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் கடந்த 1975-ம்  ஆண்டு பொது கிணறு அமைக்கப்பட்டது. தற்போது இந்த கிணறு பராமரிப்பு இன்றி பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. மேலும் இதில் கழிவு பொருட்கள் கிடப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், ம.வெள்ளாளவிடுதி, புதுக்கோட்டை. 

வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா? 
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பேரூராட்சி கொத்தப்பாளையம் மேற்கு தெருவில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மழை காலங்களில் அருகில் உள்ள தோட்டங்களில் இருந்து மழைநீர்  ஊருக்குள் புகுந்து விடுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதியில் முறையான வடிகால் வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
மகேஷ்,  கொத்தப்பாளையம், கரூர். 

போக்குவரத்திற்கு பயனற்ற சாலை 
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஒன்றியம் பனங் குளம் ஊராட்சி 6-வது வார்டுக்கு உட்பட்ட  இடுகாட்டிற்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதால் அப்பகுதியாக செல்லும் வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தார்ச்சாலை அமைக்க வேண்டும். 
பழனிவேல், பனங்குளம், புதுக்கோட்டை. 

தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு 
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் கிராமம் 8-வது வார்டு ஆலமரம் சருக்கு பாலம் வழியாக செல்லும் பெரிய கழிவுநீர் வாய்க்காலில் கழிவுநீர் செல்ல வலியின்றி மண் மேடுகளும், முள்புதர்கலும், குப்பை மேடுகளும் சூழ்ந்த நிலையில் காணப்படுகிறது.  இதனால் அப்பகுதியில் கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
கார்த்திக், விவேகானந்தர் தெரு, பெரம்பலூர். 

செயலிழக்கும் செல்போன் கோபுரத்தால் மாணவர்கள் அவதி 
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல். தொலைதொடர்பு கோபுரம் அடிக்கடி செயல் இழந்து விடுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் ஆன்லைன் வகுப்பு மூலம் படிக்கும் மாணவ-மாணவிகள்  பி.எஸ்.என்.எல். நெட்வொர்க்கை பயன்படுத்த முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ரவி, புள்ளம்பாடி, திருச்சி. 

சேறும், சகதியுமான சாலை 
திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு வெங்கடேஸ்வராநகர் பகுதியில் உள்ள சாலை சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. தற்போது நடந்து செல்லக்கூட முடியாத நிலையில் உள்ளதால் பெண்கள் சிலர் தடுமாறி கீழே விழுந்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் சாலையில் செல்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், வெங்கடேஸ்வரா நகர், திருச்சி.  

உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம் 
திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள உத்தமர்கோவில் இரயில்வே மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் கீழே விழும் நிலையில் உள்ளது. மேம்பாலத்தில் போக்குவரத்து நடைபெறும் போது வாகனங்கள் மீது இந்த மின்கம்பம் விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விக்னேஷ்வரன், பிச்சாண்டார்கோவில், திருச்சி. 

நெடுஞ்சாலை சீரமைப்பு பணி முடிவது எப்போது?
திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் வரை நெடுஞ்சாலை துறை சார்பில் புறவழியில் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகின்றன. விமானநிலையம் முதல் மாத்தூர் முடிய பழைய சாலை இருபுறமும் 20 அடிக்கு பள்ளம் தோண்டி ஜல்லி கற்கள் போடபட்டு வருகின்றன. இடையில் பாலங்கள் வேலை முடிந்து வருகிறது. இருபுறமும் கற்கள் சமப்படுதப்பட்டு தார் போடப்படவில்லை. 6 காலத்திற்கு மேல் இதே பணி நீடித்துவருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
தியாகசாந்தன், குண்டூர் பர்மா காலனி, திருச்சி.

செயல்படாத மகளிர் சுகாதார வளாகம்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் சீதேவிமங்கலம் ஊராட்சி வடக்கு கிராமத்தில் ஏராளமான பெண்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் பயன்பாட்டிற்காக அப்பகுதியில் மகளிர் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சுகாதார வளாகம் பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பால்ராஜ், சீதேவிமங்கலம், திருச்சி. 

பாதாள சாக்கடையில் அடைப்பு
திருச்சி மாநகராட்சி 33-வது வார்டு டி.வி.எஸ். டோல்கேட் ஹனிபாகாலனியில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட  அடைப்பால் கழிவுநீர் செல்ல முடியாமல் இருந்தது. இதையடுத்து கழிவுநீர், மழை நீர் வடிகால் வாய்க்காலில் திருப்பி விட்டனர். இந்த நிலையில் மழைநீர் வடிகால் தூர்ந்துபோனதால் பக்கத்தில் உள்ள காலி மனைகளில் கழிவுநீர் தேங்கி அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
செல்வராஜ், திருச்சி

மின்கம்பத்திற்கு கட்டுபோட்டுள்ள ஊழியர்கள் 
திருச்சி மாநகர், தில்லைநகர் பகுதி முதலாவது குறுக்கு தெருவில் சாலையோரத்தில்  ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் சிமெண்டு பூச்சுகள் கீழே விழுந்து கம்பிகள் தெரிந்தன. இதனை அறிந்த ஊழியர்கள் அந்த பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றாமல் ரீப்பர்கள், மரக்கம்புகளை கொண்டு கட்டுபோட்டு கட்டியுள்ளனர். போக்குவரத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து கீழே விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே போக்குவரத்து நெரிசல் உள்ள இந்த இடத்தில் உள்ள மின்கம்பத்தை மாற்ற  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், திருச்சி. 


Next Story