ஈரோடு மாவட்டத்தில் இன்று நடக்கிறது 577 இடங்களில் மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்


ஈரோடு மாவட்டத்தில் இன்று நடக்கிறது 577 இடங்களில் மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 2 Oct 2021 8:52 PM GMT (Updated: 2 Oct 2021 8:52 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 577 இடங்களில் மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடக்கிறது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 577 இடங்களில் மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடக்கிறது.
முன்னேற்பாடு பணிகள்
ஈரோடு மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 4-ம் கட்ட மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமானது கடந்த மாதம் 12, 19 மற்றும் 26-ந்தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) 4-ம் கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. முதற்கட்ட தடுப்பூசி முகாமானது 849 மையங்களிலும், 2-ம் கட்ட முகாம் 546 மையங்களிலும், 3-ம் கட்ட முகாம் 585 மையங்களிலும் நடைபெற்றது. இதில் முதற்கட்ட முகாமில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 315 தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 1 லட்சத்து 1,247 பேர்களுக்கும், 2-ம் கட்ட முகாமில் 43 ஆயிரம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 48 ஆயிரத்து 240 பேர்களுக்கும், 3-ம் கட்ட முகாமில் 82 ஆயிரத்து 440 பேர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 86 ஆயிரத்து 177 பேர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தடுப்பூசி முகாம்
4-ம் கட்ட மாபெரும் தடுப்பூசி முகாமில் 95 ஆயிரம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 577 இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஒவ்வொரு பாகத்திலும் குறைந்தபட்சம் 200 பேர்களுக்கு டோக்கன் கொடுத்து அவர்களை தடுப்பூசி முகாமிற்கு அழைத்து வரவேண்டும்.
18 வயது பூர்த்தி அடைந்த அனைவருக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாவிட்டாலும் தடுப்பூசி டோக்கன் வழங்க அனைத்து வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு தடுப்பூசி முகாம்களை ஒருங்கிணைத்து நடத்த சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையம்
மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த தேவையான நடவடிக்கைகளை இணை இயக்குனர், தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் மாவட்ட மேலாளர், மாவட்ட தொழில் மையம் இணைந்து மேற்கொள்ள வேண்டும். இனிவரும் காலங்களில் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி செலுத்தப்படும். எனவே ஏற்கனவே நடைபெற்ற 3 கட்ட தடுப்பூசி முகாம்களை போல், 4-ம் கட்ட மாபெரும் தடுப்பூசி முகாமினை சிறப்பாக நடத்திட அனைத்துதுறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன், பயிற்சி கலெக்டர் எகம்.ஜெ.சிங், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Next Story