கிராமங்களை சூழ்ந்த தண்ணீர்


கிராமங்களை சூழ்ந்த தண்ணீர்
x
தினத்தந்தி 3 Oct 2021 5:21 PM GMT (Updated: 3 Oct 2021 5:21 PM GMT)

தேனி பகுதியில் கனமழை பெய்ததால் கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது.

தேனி: 

தேனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. நீண்ட நேரம் இந்த மழை கொட்டி தீர்த்தது. தேனி அருகே நாகலாபுரம் கிராமத்தில் பலத்த மழை பெய்ததால் அங்கு உள்ள கண்மாய் நிரம்பி தண்ணீர் வெளியேறியது. அதிக அளவில் தண்ணீர் வெளியேறியதால் வரத்து வாய்க்கால்களை கடந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. 

இதனால் சாலைகள் தெருக்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நாகலாபுரம் பிரதான சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதேபால் சங்ககோணாம்பட்டி, தாடிச்சேரி, தப்புக்குண்டு, கொடுவிலார்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சாலைகள் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பாசன வாய்க்கால்கள் செல்லும் பகுதியில் தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். 

உப்புக்கோட்டை பகுதியில் நேற்று மாலை 4 மணிக்கு பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 4 மணி நேரம் நீடித்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழைக்கு உப்புக்கோட்டை-குச்சனூர் சாலையில் தனியார் பள்ளி அருகே இருந்த மின்கம்பம் ஒன்று சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியது. அந்த பகுதி வழியாக மாணிக்காபுரத்தை சேர்ந்த மாணிக்கராஜ் (வயது 25) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். 

அவர் சாலையின் குறுக்கே விழுந்த மின்கம்பத்தின் மீது மோதி படுகாயமடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மின்கம்பம் சாய்ந்து கிடந்ததால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் அங்கு வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். 


Next Story