வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 33,837 பேருக்கு கொரோனா தடுப்பூசி
வேலூர் மாவட்டத்தில் 804 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் ஒரே நாளில் 33,837 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் 804 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் ஒரே நாளில் 33,837 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறப்பு முகாம்
தமிழகம் முழுவதும் 4-ம் கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ்நிலையங்கள், மார்க்கெட், பஜார், சினிமா தியேட்டர்கள் உள்பட 804 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.
வேலூர் பழைய பஸ்நிலையத்தில் நடந்த சிறப்பு முகாமை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர், முகாமில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை ஆய்வு செய்தார். பஸ்நிலையத்துக்கு வந்த பயணிகள் மற்றும் அங்குள்ள கடை வியாபாரிகள், ஊழியர்களை கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளும்படி கலெக்டர் அறிவுறுத்தினார்.
கலெக்டர் ஆய்வு
தொடர்ந்து கலெக்டர், வேலூர் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பானுமதி, மாநகராட்சி நலஅலுவலர் மணிவண்ணன், உதவி கமிஷனர் மதிவாணன், வேலூர் தாசில்தார் செந்தில், சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஹோலிகிராஸ் பள்ளி மற்றும் காந்திநகரில் நடந்த சிறப்பு முகாமை இணை இயக்குனர் நாராயணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முகாமில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு இணை இயக்குனர் பரிசு வழங்கினார்.
33,837 பேருக்கு தடுப்பூசி
சிறப்பு முகாமிற்கு பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டு கொண்டனர். மருத்துவக்குழுவினர் பொதுமக்களின் உடல்நிலையை பரிசோதனை செய்து அவர்களின் ஆதார் எண், செல்போன் எண்ணை பதிவு செய்து தடுப்பூசி செலுத்தினார்கள்.
வேலூர் மாவட்டத்தில் 804 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் ஒரேநாளில் 33,837 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. 59,700 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மழை காரணமாக சிறப்பு முகாம்களில் தடுப்பூசி போடும் பணி பெரிதும் பாதிக்கப்பட்டது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story