சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயன்ற வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை


சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயன்ற வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை
x
தினத்தந்தி 4 Oct 2021 6:47 PM GMT (Updated: 4 Oct 2021 6:47 PM GMT)

சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயன்ற வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை,
சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ந் தேதி இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கறம்பக்குடி வடக்கு தெருவை சேர்ந்த புண்ணியமூர்த்தியின் மகன் அய்யப்பன் (வயது 25) மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்க மறுத்து, சிகரெட் புகைத்தப்படி போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணேசனை தாக்கி, மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பீர் பாட்டிலை எடுத்து கொலை செய்ய முயன்றிருக்கிறார்.
7 ஆண்டுகள் சிறை தண்டனை
இந்த சம்பவம் தொடர்பாக அய்யப்பன் மீது அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல், கொலை முயற்சி ஆகிய பிரிவுகளில் கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்து வந்த மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல்காதர் நேற்று தீர்ப்பு வழங்கினார்.
இதில் அய்யப்பனுக்கு அரசு பணியை செய்ய விடாமல் தடுத்ததற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும், கொலை முயற்சி பிரிவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும், இதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.

Next Story