நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பெண் திடீர் சாவு; உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு


நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பெண் திடீர் சாவு; உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு
x
தினத்தந்தி 5 Oct 2021 1:53 AM GMT (Updated: 5 Oct 2021 2:05 AM GMT)

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பெண் திடீரென இறந்த நிலையில், கணவர் மற்றும் மாமியார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி அருகே உள்ள ஏ.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகள் நந்தினி (வயது 30). இவருக்கும், திருச்சி மாவட்டம் நாகை நல்லூரை சேர்ந்த முருகவேல் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி நந்தினி உடல்நலக்குறைவு ஏற்பட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று நந்தினி திடீரென சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதனை அறிந்த நந்தினியின் உறவினர்கள் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர். அவர்கள் நந்தினியை அவரது கணவர் முருகவேல், மாமியார் தாக்கியதில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்து விட்டதாக கூறியும், அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரியும் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் நேற்று மோகனூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story