3 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கர்நாடகம் வந்தார்
3 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று கர்நாடகம் வந்தார். அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
பெங்களூரு:
ராம்நாத் கோவிந்த் வந்தார்
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 3 நாட்கள் சுற்றுப்பயணமாக அக்டோபர் 6-ந்தேதி (அதாவது நேற்று) கர்நாடகம் வருவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று தனி விமானம் மூலம் கர்நாடகம் வந்தார்.
பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு நண்பகல் 12.40 மணிக்கு வந்த அவரை கவர்னர் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர். அதன் பிறகு அவர் அங்கிருந்து கார் மூலம் பலத்த பாதுகாப்புடன் கவர்னர் மாளிகைக்கு வந்தார்.
புதிய கட்டிடம் திறப்பு
நேற்று இரவு ராஜ்பவனில் தங்கிய அவர் இன்று (வியாழக்கிழமை) காலை 8.30 மணிக்கு விமானம் மூலம் மைசூருவுக்கு செல்கிறார். அங்கு அவரை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வரவேற்கிறார்.
அதன் பிறகு ராம்நாத் கோவிந்த், கார் மூலம் சாம்ராஜ்நகருக்கு செல்கிறார். அங்கு அரசு மருத்துவ கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 450 படுக்கைகள் கொண்ட கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைக்கிறார். இதில் முதல்-மந்திரியும் கலந்து கொள்கிறார்.
சாரதா மடத்திற்கு செல்கிறார்
அந்த விழாவை முடித்து கொண்டு அவர் அதே மாவட்டத்தில் உள்ள பி.ஆர். மலைக்கு (பிளிகிரி ரங்கநாத பெட்டா) செல்கிறார். அங்குள்ள ரங்கநாதசாமி கோவிலுக்கு சென்று அவர் வழிபடுகிறார். அங்கு இயற்கை காட்சிகளை ரசித்துவிட்டு பிறகு அவர் மங்களூருவுக்கு வருகிறார்.
இன்று இரவு மங்களூருவில் தங்கும் அவர், நாளை (வெள்ளிக்கிழமை) காலை ஹெலிகாப்டர் மூலம் சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரியில் உள்ள ஆதிசங்கரர் தோற்றுவித்த சாரதா மடத்திற்கு வருகிறார். பிறகு அவர் சாரதம்மா கோவிலுக்கு சென்று வழிபடுகிறார்.
டெல்லி புறப்படுகிறார்
பின்னர் ஹெலிகாப்டரில் மங்களூரு வரும் அவர், நாளை இரவு மீண்டும் மங்களூருவில் தங்குகிறார். இந்த 3 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு அவர் நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை மங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
ஜனாதிபதி வருகையையொட்டி பெங்களூரு, மைசூரு, சாம்ராஜ்நகர், மங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story