தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து


தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து
x
தினத்தந்தி 7 Oct 2021 10:38 PM IST (Updated: 7 Oct 2021 10:38 PM IST)
t-max-icont-min-icon

தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே தென்னை நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் கார், டிராக்டர் நாசமடைந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்னை நார் தொழிற்சாலை

பொள்ளாச்சி அருகே உள்ள அம்மேகவுண்டனூரில் தனியாருக்கு சொந்தமான தென்னைநார் தொழிற்சாலை உள்ளது. இங்கு வழக்கம் போல் தொழிலாளர்கள் பணி முடிந்து வீட்டிற்கு புறப்பட்டு கொண்டிருந்தனர். 

அப்போது இரவு 7 மணிக்கு திடீரென்று தென்னை நார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை பார்த்த தொழிலாளர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பிடித்து எரிந்தது. 

தீயை அணைக்க முயற்சி 

இதுகுறித்து பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்தனர். 

அதற்குள் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கார், டிராக்டர் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதையடுத்து தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.
 
லட்சக்கணக்கில் சேதம் 

இதையடுத்து கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது. ஆனால் தண்ணீர் தீர்ந்ததால் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைத்தனர். 

மேலும் அருகில் கால்வாயில் சென்ற தண்ணீரை எடுத்தும் தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப் பட்டது.

 இந்த தீ விபத்தில் கார், டிராக்டர் மற்றும் தென்னை நார் சேதமானது. அதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

போலீசார் விசாரணை 

இதுகுறித்து கோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அதன்பேரில் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையின் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரியவந்து உள்ளது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story