சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 8 Oct 2021 10:04 PM IST (Updated: 8 Oct 2021 10:04 PM IST)
t-max-icont-min-icon

சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

கோவை

காங்கிரஸ் தலைவர்கள் குறித்து அவதூறாக பேசி வரும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, தெலுங்கானா மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் உத்தம்குமார் ரெட்டி எம்.பி. ஆகியோர்  கோவையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு நேற்று வருகை தந்தனர். அவர்களை செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி. மனோகரன் ஆகியோர் வரவேற்றனர்.

சீமான் மீது நடவடிக்கை

பின்னர் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சமீபகாலமாக பெரியார், வைகோ, சோனியா, ராகுல் காந்தி, ராஜீவ் காந்தி உள்ளிட்ட தலைவர்களை தரக்குறைவான முறையில் பேசி வருகிறார். 

பெண்களை விமர்சிக்கும்போது சக்களத்தி என்கிற வார்த்தையை பயன்படுத்துகிறார். இதுபோன்ற வார்த்தையை நமது சங்க இலக்கியங்களில் இல்லை.

கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. ஆனால் நாகரிக முறையில் பேச வேண்டும். வரைமுறையற்ற, அருவருக்கத்தக்க பேச்சுகள் இருமுனை கூர் தீட்டப்பட்ட கத்தியை போன்றது. 

சீமானின் தரம் தாழ்ந்த விமர்சனம் குறித்து சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம். போலீஸ் அதிகாரிகள் 7 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து உள்ளனர். இல்லையென்றால் சட்டரீதியாக  சந்திப்போம்.

பெட்ரோல், டீசல் விலை

மத்திய மோடி அரசின் தவறான வரி விதிப்பு முறையால் தற்போது பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. மன்மோகன்சிங் பிரதம ராக இருந்த போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 108 டாலருக்க விற்பனை செய்யப்பட்டது. 

அப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஒரு பீப்பாய் 50 டாலர் முதல் 70 டாலர் வரை விற்கிறது. ஆனால் மோடி அரசு பெட்ரோலை லிட்டருக்கு ரூ.100-க்கு விற்கிறது. அதை ரூ.35-க்கு விற்கலாம். 

தி.மு.க. அரசு பதவியேற்ற 40 நாட்களில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்துள்ளது. ஆனால் 7 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பிரதமர் மோடி ஒரு ரூபாய் கூட குறைக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடி மவுனம்

இதைத்தொடர்ந்து உத்தம்குமார் ரெட்டி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர்கேரி மாவட்டத்தில் விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பாக பிரதமர் மோடி மவுனம் காத்து வருகிறார். இது கண்டிக்கத்தக்கது. 

அமேசான் நிறுவனம், அமெரிக்க அரசுக்கு அளித்த ஆவணத்தில் சட்ட கட்டணம் என்ற பெயரில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறைக்கு ரூ.8 ஆயிரத்து 546 கோடியை வழங்கி உள்ளதாக தெரிவித்து உள்ளது. 

இது குறித்து தற்போது பதவியில் இருக்கும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

14 கோடி பேர் வேலை இழப்பு

இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளில் 14 கோடி பேர் வேலை இழந்து உள்ளனர். வணிகர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் வாழ்வாதாரங்களை இழந்து உள்ளனர். 

குஜராத் மாநிலத்தில் அம்பானி நிர்வகிக்கும் துறைமுகத்தில் 3 ஆயிரம் கிலோ போதைப்பொருள் பிடிபட்டு உள்ளது. நாடு முழுவதும் 25 ஆயிரம் கிலோ போதைப்பொருள் பல்வேறு துறைமுகங்கள் வழியாக வந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதன் மொத்த மதிப்பு ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடியாகும். நாட்டில் போதை பழக்கம் அதிகரித்து உள்ளதையே இது காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story