ஸ்ரீரங்கப்பட்டணாவில் தசரா ஊர்வலத்தில் கோபாலசாமி யானை மிரண்டதால் பரபரப்பு


ஸ்ரீரங்கப்பட்டணாவில் தசரா ஊர்வலத்தில் கோபாலசாமி யானை மிரண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 Oct 2021 3:04 AM IST (Updated: 10 Oct 2021 3:04 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீரங்கப்பட்டணாவில் தசரா ஊர்வலத்தின்போது கோபாலசாமி யானை மிரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஜம்பு சவாரி ஊர்வலம் ரத்து செய்யப்பட்டது.

மண்டியா:

மண்டியா தசரா விழா

  மைசூரு தசரா விழாவைபோல் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவிலும் ஆண்டுதோறும் தசரா விழா மற்றும் ஜம்பு சவாரி ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது. மைசூரு தசரா விழா மன்னர்கள் காலத்தில் ஸ்ரீரங்கப்பட்டணாவில்தான் நடத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள கிரங்கனூரு பன்னிமண்டபத்தில் தசரா விழா ஜம்பு சவாரி ஊர்வலம் நடந்தது. இதற்காக மைசூருவில் இருந்து கோபாலசாமி உள்ளிட்ட 5 யானைகள் மண்டியாவுக்கு அழைத்து வரப்பட்டன.

  கிரங்கனூரு பன்னிமண்டபத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து ஜம்பு சவாரி ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தை ஆதிசுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தநாதசாமி தொடங்கி வைத்தார்.

யானை மிரண்டது

  ஊர்வலத்தில் மந்திரி நாராயணகவுடா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் சிலை வீற்றிருக்கும் அம்பாரியை சுமந்து கொண்டு கோபாலசாமி உள்ளிட்ட யானைகள் புறப்பட்டு ஊர்வலமாக சென்றன. ஊர்வலத்தில் நடன கலைஞர்களின் ஆடல், பாடல் மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகளும் இடம்பெற்று இருந்தன. கிரங்கனூரு ரங்கநாதா கோவில் அருகே ஊர்வலம் வந்து கொண்டிருந்தபோது பட்டாசுகள் அதிக அளவில் வெடிக்கப்பட்டன. மேலும் இசை வாத்தியங்களும் அதிக அளவில் ஒலிக்கப்பட்டன.

  இதனால் கோபாலசாமி யானை மிரண்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை கவனித்த யானை பாகன்கள் உடனடியாக விழாக்குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்க உடனடியாக ஜம்பு சவாரி ஊவலம் நிறுத்தப்பட்டது.

சகஜ நிலைக்கு...

  பின்னர் யானைகள் பாதுகாப்பாக வனத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டன. அங்கிருந்து யானைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு மீண்டும் மைசூரு அரண்மனைக்கு அழைத்து செல்லப்பட்டன. லாரியில் ஏறும்போது கோபாலசாமி யானை மிரண்டது குறிப்பிடத்தக்கது. மைசூரு அரண்மனையை வந்தடைந்ததும் கோபாலசாமி யானை சகஜ நிலைக்கு திரும்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story