வருமான வரி சோதனைக்கு பயந்து மந்திரிகள் டெல்லியில் முகாம் - டி.கே.சிவக்குமார் கடும் தாக்கு
முன்னாள் நீர்ப்பாசனத்துறை மந்திரியிடம் விசாரிக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளதால், வருமான வரி சோதனைக்கு பயந்து மந்திரிகள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர் என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
அரசியல் இருக்கத்தான் செய்யும்
மாநிலத்தில் நீர்ப்பாசனத்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகள், எடியூரப்பாவின் உதவியாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு பின்னணியில் ஏதோ ஒரு கணக்கு இருக்கிறது. வருமான வரித்துறையிடம் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வரும் வரை, இந்த சோதனை பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. அரசியல் காரணங்களுக்காக நடப்பதாக கூறுவதற்கு என்னிடம் சரியான ஆதாரங்களும் இல்லை.
வருமான வரித்துறையின் சோதனைக்கு உள்ளாகி இருக்கும் நபர்கள் எவ்வளவு பணம் சேர்த்து வைத்துள்ளனர்?, என்ன காரணத்திற்காக சோதனை நடத்தப்பட்டது என்பதற்கான சரியான தகவல்கள் வரும் வரை இந்த விவகாரம் குறித்து அதிகம் பேசுவது சரியல்ல. எந்த ஒரு சோதனைக்கும் பின்னணியில் அரசியல் இருக்கத்தான் செய்யும்.
மந்திரிகள் டெல்லியில் முகாம்
மத்தியில் பா.ஜனதா அரசு ஆட்சியில் உள்ளது. அவர்கள் யாரை வேண்டுமானலும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு வருமான வரித்துறை மூலமாக சோதனை நடத்தலாம். உமேஷ் எடியூரப்பாவின் உதவியாளர் தானே?. அவர், உமேஷ் என்னுடைய உதவியாளர் இல்லை என்று ஒரு போதும் கூறியதில்லை. நீர்ப்பாசன திட்டங்களில் முறைகேடு நடந்திருந்தால், இதற்கு முன்பு நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்தவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
அத்துடன் மந்திரிகள் சிலரது வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. அதனால் சில மந்திரிகள் தங்களது வீடுகளில் சோதனை நடத்த வேண்டாம் என்று கோரி டெல்லியில் முகாமிட்டுள்ளனர். வருமான வரி சோதனைக்கு பின்பு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மட்டும் டெல்லிக்கு செல்லவில்லை. அவருடன் முன்னாள் நீர்ப்பாசனத்துறை மந்திரியும் டெல்லிக்கு சென்றுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story