வாக்காளர்களுக்கு தி.மு.க.வினர் தங்க மூக்குத்தி பரிசு அ.தி.மு.க. சாலை மறியல்


வாக்காளர்களுக்கு தி.மு.க.வினர் தங்க மூக்குத்தி பரிசு அ.தி.மு.க. சாலை மறியல்
x
தினத்தந்தி 10 Oct 2021 9:27 AM IST (Updated: 10 Oct 2021 9:27 AM IST)
t-max-icont-min-icon

குன்றத்தூர் ஒன்றியத்தில் வாக்காளர்களுக்கு தி.மு.க.வினர் தங்க மூக்குத்தி பரிசாக கொடுத்ததாக கூறி அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி,

செங்கல்பட்டு, காஞ்சீபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு நேற்று 2-வது கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. குன்றத்தூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகளில் நேற்று தேர்தல் நடந்தது.

குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொல்லசேரி ஊராட்சியில் தி.மு.க. சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர், அந்த பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு வீடு, வீடாக சென்று தங்க மூக்குத்திகளை பரிசாக கொடுப்பதாக வந்த தகவலையடுத்து, அ.தி.மு.க.வினர் அங்கு திரண்டனர்.

அ.தி.மு.க.வினரை பார்த்ததும் தி.மு.க.வினர் அங்கிருந்து ஓடி விட்டதாக கூறப்படுகிறது. அங்கு வாக்காளர்களுக்கு தி.மு.க.வினர் பரிசாக கொடுத்த மூக்குத்திகளை அ.தி.மு.க.வினர் பறிமுதல் செய்ததாகவும் தெரிகிறது.

சாலை மறியல்

இதையடுத்து தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள் கொடுப்பதாக கூறி, அ.தி.மு.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சாலை மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பழனி அங்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்தார். பின்னர் இதுகுறித்து அ.தி.மு.க.வினர் அளித்த புகாரின்பேரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மேலும் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்காமல் இருக்க அந்த பகுதி முழுவதும் அ.தி.மு.க.வினர் மற்றும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

Next Story