குழந்தைகளை கவனிக்காமல் கோவிலுக்கு சென்றதால் ஆத்திரம்: மனைவியை கட்டையால் அடித்து கொன்ற தொழிலாளி


குழந்தைகளை கவனிக்காமல் கோவிலுக்கு சென்றதால் ஆத்திரம்: மனைவியை கட்டையால் அடித்து கொன்ற தொழிலாளி
x
தினத்தந்தி 10 Oct 2021 9:54 AM IST (Updated: 10 Oct 2021 9:54 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் குழந்தைகளை கவனிக்காமல் அடிக்கடி கோவிலுக்கு சென்றதால் ஆத்திரமடைந்து மனைவியை கட்டையால் அடித்து கொன்ற கணவர் போலீசில் சரண் அடைந்தார்.

ஆவடி,

ஆவடியை அடுத்த திருநின்றவூர் சுதேசி நகர் கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது 40). இவர், சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி (36). இவர்களுக்கு புவனாஸ்ரீ (8) என்ற மகளும், சஞ்சய்ஸ்ரீ மோகன் (5) என்ற மகனும் உள்ளனர்.

செல்வி தனது குழந்தைகளை கவனிக்காமலும், கணவாிடம் சொல்லாமலும் அடிக்கடி வீட்டில் இருந்து கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டு இருந்ததாக தெரிகிறது. இதனை சந்திரமோகன் கண்டித்து வந்தார்.

கடந்த 7-ந் தேதி வழக்கம்போல் செல்வி, தனது கணவரிடம் சொல்லாமல் திருவண்ணாமலை பகுதியில் உள்ள ஒரு ஆசிரமத்துக்கு சென்றார். அங்கிருந்து நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு திரும்பி வந்தார். குழந்தைகளை கவனிக்காமல், என்னிடமும் சொல்லாமல் இதுபோல் கோவிலுக்கு செல்கிறாயே? என சந்திரமோகன் கண்டித்தார். இதனால் மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

அடித்துக்கொலை

இதனால் ஆத்திரம் அடைந்த சந்திரமோகன், அருகில் கிடந்த கட்டையை எடுத்து தனது மனைவி செல்வியின் தலையில் பலமாக தாக்கினார். இதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டிய நிலையில், அதை கவனிக்காமல் செல்வி வீட்டில் இருந்து அருகில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று விட்டார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் செல்வி நீண்டநேரம் கோவில் வாசலில் விழுந்து கிடப்பதை பார்த்து சந்திரமோகனுக்கு தகவல் கொடுத்தனர்.

சந்திரமோகன் தனது மனைவி சுயநினைவின்றி இருப்பதை அறிந்து உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், செல்வி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

போலீசில் சரண்

இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரமோகன், நேற்று திருநின்றவூர் போலீஸ் நிலையம் சென்று நடந்த விவரங்களை கூறி சரண் அடைந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரமோகனை கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தாயை இழந்ததுடன், தந்தையும் சிறைக்கு சென்று விட்டதால் அவர்களின் இரு குழந்தைகளும் அனாதையாக நி்ற்பது சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story