குன்றத்தூர் ஒன்றியத்தில் ஒரு வாக்குச்சாவடியில் தேர்தல் நிறுத்தம்


குன்றத்தூர் ஒன்றியத்தில் ஒரு வாக்குச்சாவடியில் தேர்தல் நிறுத்தம்
x
தினத்தந்தி 10 Oct 2021 5:22 AM GMT (Updated: 10 Oct 2021 5:22 AM GMT)

ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்காக போட்டியிடும் பா.ம.க. வேட்பாளரின் பெயர், சின்னம் இல்லாததால் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் தேர்தல் நிறுத்தப்பட்டது.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் முதற்கட்டமாக உத்திரமேருர், காஞ்சீபுரம், வாலாஜாபாத், ஆகிய பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6-ந் தேதி நடந்து முடிவடைந்தது. ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், குன்றத்தூர் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் நேற்று 2-ம் கட்டமாக நடைபெற்றது.

இந்நிலையில் 2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேல் வாக்களர்கள் உள்ள குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 398 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான வாக்குப்பெட்டி, வாக்குச்சீட்டு, பொருட்கள் ஆகியவற்றை நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் பூந்தண்டலம் ஊராட்சியில் உள்ள புதுச்சேரி வாக்குச்சாவடி மையம் 173-ல் வார்டு எண் 12-ல் நேற்று காலை 7 மணிக்கு வாக்காளர்கள் வாக்களிக்க தொடங்கினர். இந்த வார்டில் மொத்தம் 606 ஓட்டுகள் உள்ளது. 72 பேர் வாக்களிக்க தொடங்கிய நிலையில், இரண்டாவது வாக்குச் சீட்டு புத்தகத்தில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கான வாக்குச்சீட்டுக்களில் பா.ம.க. வேட்பாளரின் பெயர் மற்றும் கட்சியின் சின்னம் இல்லாததை கண்டு வாக்காளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தேர்தல் நிறுத்தம்

இது குறித்து வாக்காளர்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து வாக்குச்சீட்டு புத்தகத்தை ஆய்வு செய்ததில், மாம்பழம் சின்னம் மற்றும் பா.ம.க. வேட்பாளரின் பெயரும் இல்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். அதில், உதயசூரியன் மற்றும் இரட்டை இலை சின்னம் மட்டுமே இருந்தது.

ஆனால் அந்த கட்சிகளின் வேட்பாளரின் பெயரும் தவறாக இருந்ததை பார்த்து மேலும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அந்த வாக்குச்சாவடி மையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஒன்றிய குழு தேர்தல் அலுவலர் சைலேந்திரன், தேரதல் அலுவலர் சீனிவாசன், ஆகியோர் நேரில் சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து காஞ்சீபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், தேர்தல் பார்வையாளர் அமுதவல்லி ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து அந்த ஒரு வாக்குச் சாவடி மையத்திற்கு தேர்தல் நிறுத்தப்பட்டது. நிறுத்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்திற்கு மறுவாக்குப்பதிவுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக பெரும்புதூர் ஒன்றியம், குன்றத்தூர் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது.

போலீசார் பேச்சுவார்த்தை

இந்நிலையில் மாடம்பாக்கம் ஊராட்சியில் மாலை 5 மணிக்கு வாக்காளர்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வந்தனர். அப்போது நேரம் முடிந்து விட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் வாக்களிக்க வந்தவர்கள் வாக்குச்சாவடி நுழைவு பகுதி கேட்டின் அருகில் தரையில் அமர்ந்தனர். இதனை தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story