ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் ஊராட்சி தேர்தல்: வாக்குச்சாவடியில் மோதல்; வாக்குப்பதிவு பாதிப்பு


ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் ஊராட்சி தேர்தல்: வாக்குச்சாவடியில் மோதல்; வாக்குப்பதிவு பாதிப்பு
x
தினத்தந்தி 10 Oct 2021 10:56 AM IST (Updated: 10 Oct 2021 10:56 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் நடைபெற்ற ஊராட்சி தேர்தலில் வாக்குச்சாவடியில் மோதல் ஏற்பட்டு வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று மிக ஆர்வமுடன் தங்கள் வாக்குகளை செலுத்தினர். இதில் பதற்றமான வாக்கு சாவடிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் மொத்தம் 203 வாக்குச்சாவடிகள், அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சந்தாவேலூர் ஊராட்சியில் வாக்குப்பதிவின் போது ஒரு தரப்பினர் ஓட்டு போடும் பூத்தின் அருகே வாக்கு சேகரித்ததாக கூறப்படுகிறது.

இதை சிலர் தட்டி கேட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.

வாக்குப்பதிவு பாதிப்பு

அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் விரைந்து வந்து கூட்டத்தை கலைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மேவலூர் ஊராட்சியில் நேற்று வாக்குப்பதிவு நடந்து கொண்டு இருந்த போது சிலர் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்களை வினியோகம் செய்வதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று அரிசி மூட்டை, சமையல் எண்ணெய், மளிகை பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Next Story