குழந்தைகளை கவனிக்காமல் கோவிலுக்கு சென்றதால் ஆத்திரம்: மனைவியை கட்டையால் அடித்து கொன்ற தொழிலாளி


குழந்தைகளை கவனிக்காமல் கோவிலுக்கு சென்றதால் ஆத்திரம்: மனைவியை கட்டையால் அடித்து கொன்ற தொழிலாளி
x
தினத்தந்தி 10 Oct 2021 12:58 PM IST (Updated: 10 Oct 2021 12:58 PM IST)
t-max-icont-min-icon

வீட்டில் குழந்தைகளை கவனிக்காமல் அடிக்கடி கோவிலுக்கு சென்றதால் ஆத்திரமடைந்து மனைவியை கட்டையால் அடித்து கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.

ஆவடி,

ஆவடியை அடுத்த திருநின்றவூர் சுதேசி நகர் கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது 40). சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி (36). இவர்களுக்கு புவனாஸ்ரீ (8) என்ற மகளும், சஞ்சய்ஸ்ரீ மோகன் (5) என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் செல்வி தனது பிள்ளைகளை கவனிக்காமலும், கணவாிடம் சொல்லாமலும் அடிக்கடி வீட்டில் இருந்து கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து தன்னிடம் சொல்லாமல் பிள்ளைகளை கவனிக்காமல் அடிக்கடி இப்படி கோவில்களுக்கு சென்று வருகிறாயே என்று சந்திரமோகன் தனது மனைவி செல்வியை கண்டித்துள்ளார். இந்நிலையில் கடந்த 7-ந் தேதி அன்று திருவண்ணாமலை பகுதியில் உள்ள ஒரு ஆசிரமத்திற்கு செல்வி கணவரிடம் சொல்லாமல் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த சந்திரமோகன் அருகில் இருந்த கட்டையை எடுத்து தனது மனைவி செல்வியின் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.

சாவு

இதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டிய நிலையில், அதை கவனிக்காமல் செல்வி வீட்டில் இருந்து அருகில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றுள்ளார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் செல்வி நீண்டநேரம் கோவில் வாசலில் விழுந்து கிடப்பதை பார்த்து சந்திரமோகனுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து சந்திரமோகன் தனது மனைவி சுயநினைவின்றி இருப்பதை அறிந்து நேற்று முன்தினம் இரவு உடனடியாக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு டாக்டர்கள் செல்வி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி உள்ளனர். அதைத்தொடர்ந்து சந்திரமோகன் திருநின்றவூர் போலீஸ் நிலையம் சென்று நேற்று சரண் அடைந்தார்.

இதுகுறித்து திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து சந்திரமோகனை கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். வீட்டில் இல்லாமல் அடிக்கடி மனைவி கோவிலுக்கு சென்றதால் கணவர் கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story