ஜல்ஜீவன் திட்டத்தில் 29525 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு
ஜல்ஜீவன் திட்டத்தில் 29525 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு
கோவை
கோவை மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் இதுவரை 29,525 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
ஜல்ஜீவன் திட்டம்
நாடு முழுவதும் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க கடந்த 2019-ம் ஆண்டு ஜல்ஜீவன் திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இதன்படி 2024-ம் ஆண்டுக்குள் கிராமங்களில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக நடப்பாண்டு பட்ஜெட்டில் ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது.
கிராமங்களில் உள்ள வீடுகள் அல்லது வீட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில் குடிநீர் குழாய் அமைக்கப்படுகிறது. ஒரு தனிநபருக்கு ஒரு நாளைக்கு 50 லிட்டர் வரை தண்ணீர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் பலர் பயனடைந்து வருகின்றனர்.
இது குறித்து கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இணை இயக்குனர் கவிதா கூறியதாவது:-
29,525 இணைப்பு
ஒவ்வொரு வீட்டுக்கும் போதிய அளவில் தரமான குடிநீர் வழங்க வேண்டும் என்ற நோக்கில் ஜல்ஜீவன் திட்டத்தை மத்திய- மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்துகின்றன. கோவை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 228 கிராம ஊராட்சிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
2024-ம் ஆண்டுக்குள் மொத்தம் 2,06,076 குடிநீர் இணைப்புகள் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி 2020- 21-ம் ஆண்டுக்கு 50,953 வீடுகளுக்கு இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் தற்போது வரை 29,525 பேருக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப் பட்டு உள்ளது. தேவைப்பட்டால் அரசு பள்ளிகள் மற்றும் அங்கன் வாடி மையங்களுக்கும் இணைப்பு வழங்கப்படுகிறது. சிறுவாணி, பில்லூர் அணை தண்ணீர் மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணற்று தண்ணீர் விடப்படுகிறது.
இவர் அவர் கூறினார்.
Related Tags :
Next Story