ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு 2880 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்க வேண்டும்
ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு 2880 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்க வேண்டும்
பொள்ளாச்சி
ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு 2,880 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
அதிகாரியிடம் மனு
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை மூலம் பழைய, புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகள் பயன்பெற்று வருகின்றன. புதிய ஆயக்கட் டில் பொள்ளாச்சி, வேட்டைக்காரன்புதூர், சேத்துமடை, ஊட்டு கால்வாய் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. மேலும் அ, ஆ என இரு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மொத்தம் 44 ஆயிரத்து 380 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இந்த நிலையில் ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன நலச்சங்கத்தினர், பொதுப் பணித்துறை கோவை தலைமை பொறியாளரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2,880 மில்லியன் கன அடி
ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்தில் மொத்தம் 44 ஆயிரத்து 380 ஏக்கரில் அ, ஆ மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒரு மண்டலத்தில் 22 ஆயிரம் ஏக்கர் வீதம் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாசனம் நடை பெற்று வருகிறது. பாசனத்திற்கு ஒரு சுற்றுக்கு 15 நாட்கள் வீதம் 6 சுற்றுக்கு 90 நாட்கள் என்பது நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால் அதை சமீப ஆண்டுகளாக படிப்படியாக குறைத்து 60 முதல் 80 நாட்களுக்கு மேல் பாசனத்திற்கு நீர் வழங்க மறுக்கப்பட்டு வருகிறது.
நடப்பு ஆண்டில் பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் முழு கொள்ளளவு நீர் இருப்பு உள்ளது. எனவே பாசனத்திற்கு 90 நாட்களுக்கு 2,880 மில்லியன் கன அடி நீர் வழங்க வேண்டும் என கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளருக்கு மனு கொடுக்கப்பட்டது.
தண்ணீர் வழங்க வேண்டும்
அந்த மனு மீதான நீர் பங்கீடு பேச்சுவார்த்தையில் 2,709 மில்லியன் கன அடிக்கும் குறையாமல் வழங்குவது என முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அதிகாரிகள் தரப்பில் 80 நாட்களுக்கு 2,580 மில்லியன் கன அடிக்கு மேல் பரிந்துரைக்க இயலாது என கூறுகின்றனர். எனவே எங்களின் கோரிக்கையை பரிசீலித்து பாசனத்திற்கு முழுமையான தண்ணீர் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட தலைமை பொறியாளர், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அப்போது தற்போதைய நீர் இருப்பை கொண்டு உரிய நீரை பரிந்துரைக்க முடியாத பட்சத்தில் கூடுதலாக மழை பெய்து அணைகளின் நீர் இருப்பு உயர்ந்த பிறகு அரசாணை பெற்றுக் கொள்கிறோம் என்று விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story