பெங்களூருவில் கனமழை கொட்டியது
பெங்களூருவில் நேற்று கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளம் தேங்கி நின்றது.
பெங்களூரு:
கனமழை கொட்டியது
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் முடிவடைந்துவிட்டது. அந்த காலக்கட்டத்தில் பெங்களூருவில் பெரிதாக மழை பெய்யவில்லை. இந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் கர்நாடகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தலைநகர் பெங்களூருவில் கடந்த சில நாட்களாக தினமும் மழை பெய்து வருகிறது. பெங்களூருவில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாக இருந்தது. குளிர்ந்த காற்றும் வீசியது.
மதியம் 12 மணியளவில் கருமேகங்கள் ஒன்றுகூடி மழை பெய்யத்தொடங்கியது. இது சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. அதன் பிறகு மாலையில் மீண்டும் கனமழை பெய்தது. வில்சன் கார்டன், ஜெயநகர், ஜே.பி.நகர், பேகூர், பொம்மனஹள்ளி, மெஜஸ்டிக், ராஜாஜிநகர், ஜே.சி.ரோடு, லால்பாக், சாந்திநகர், எம்.பி.ரோடு, கப்பன் பார்க் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி நின்றது.
வாகன ஓட்டிகள்
சுரங்க பாதைகளில் மழைநீர் அதிகளவில் தேங்கி நின்றதால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கனமழை பெய்தாலும் வாகன நெரிசல் அதிகமாக ஏற்படவில்லை. ஒரு சில சாலைகளில் லேசான நெரிசல் ஏற்பட்டது.
நகரின் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. பெங்களூருவில் இன்னும் சில நாட்களில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 3 ஆண்டுகளுக்கு பிறகு பெங்களூருவில் மழை கொட்டி வருவது, நகரவாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Related Tags :
Next Story