ஊட்டியில் அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது


ஊட்டியில் அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 11 Oct 2021 7:52 PM IST (Updated: 11 Oct 2021 7:52 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது

ஊட்டி

ஊட்டியில் கனமழை பெய்ததால் அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கனமழை கொட்டியது

அந்தமானில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. 

அதன்படி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 

மதியம் மப்பும், மந்தாரமுமாக மாறியது. மதியம் 1.30 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இடைவிடாமல் தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் பெய்தது.

இதனால் ஊட்டி லோயர் பஜார், கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ், மத்திய பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சியடித்த படி சென்றன. 

இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள், நடந்து சென்றவர்கள் மழைக்கு ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர். 

சுற்றுச்சுவர் விழுந்தது

கனமழை காரணமாக ஊட்டி கோடப்பமந்து கால்வாயில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதாள சாக்கடை குழாய்களை மாற்றி அமைக்கும் பணி பாதிக்கப்பட்டது. பதிக்கப்பட்ட குழாய்களை மூழ்கடித்தபடி வெள்ளம் சென்றது. 

கனமழை காரணமாக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் வெளி நோயாளிகள் பிரிவு பகுதியில் தடுப்புச்சுவருடன் கூடிய சுமார் 50 அடி நீள சுற்றுசுவர் இடிந்து விழுந்தது. எனவே அங்கு போக்குவரத்து மாற்றம் செய் யப்பட்டது. 

படகுசவாரி 

சுற்றுச்சுவர் விழுந்த போது, அந்த சாலையில் யாரும் நடந்து செல்ல வில்லை. மேலும் அங்கு வாகனங்கள் ஏதும் நிறுத்தப்படாமல் இருந்தது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதையடுத்து நகராட்சி பொக்லைன் எந்திரம் மூலம் கட்டிட இடிபாடுகள் அகற்றப்பட்டது. சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் அதையொட்டி இருந்த கட்டிடங்கள் அந்தரத்தில் நிற்பது போல் காட்சி அளித்தது.

ஊட்டி படகு இல்லத்தில் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகு சவாரி நிறுத்தப்பட்டது. மழை விட்ட படகு சவாரி தொடங்கியது.

குன்னூரில் மண்சரிவு

குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை 10.15 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. அது நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக உருவெடுத்தது. இதனால் சாலைகளிலும், ஆறுகளிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

பலத்த மழையின் காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை பர்லியார் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் மரம் வேருடன் சாலையில் விழுந்தது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. குன்னூர் பேரக்ஸ் சாலையில் அன்னை வேளாங்கண்ணி நகர் அருகே தனியார் தேயிலை தோட்டத்தில் மண்சரிவு ஏற்பபட்டது. 

இதனால் குன்னூர் பேரக்ஸ் சாலையில் மண் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதையடுத்து குன்னூர் நகராட்சி பொக்லின் எந்திரம் வரவழைக்கப்பட்டு ரோட்டில் கிடந்த மண் அகற்றப்பட்டது. அதன்பிறகு போக்குவரத்து சீரானது.

போக்குவரத்து பாதிப்பு

குன்னூரை அடுத்த பேரட்டி ஊராட்சி பாரத் நகரில் மழை காரணமாக மூர்த்தி என்பவரின் வீட்டின் ஒரு பக்கசுவர் திடீரென்று இடிந்தது. 

இதை அறிந்த அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.  குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் குடும்பாடி அருகே சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. 

கே.என்.ஆர்.நகர் அருகே சாலையின் குறுக்கே மரம் விழுந்தது. இதனால் குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இது குறித்து தகவல் அறிந்த தேசிய நெடுஞ்சாலை துறையினரும், தீயணைப்பு துறையினரும் இணைந்து ரோட்டில் கிடந்த மண் மற்றும் மரங்களை வெட்டி அகற்றினர். 

இதனால் சுமார் 1½ மணி நேரத்திற்கு பிறகு குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து தொடங்கியது.

மழை அளவு

நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன்  முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு

ஊட்டி-0.8, பர்லியார்-35, கூடலூர்-20, தேவாலா-23, செருமுள்ளி-17, பாடாந்தொரை-16, பந்தலூர்-15, சேரங்கோடு-13 உள்பட மொத்தம் 190.8 மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 6.58 ஆகும்.


Next Story