கொட்டும் மழையில் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்
கொட்டும் மழையில் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்
கோத்தகிரி
ஹெத்தையம்மன் கோவிலை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்து கொட்டும் மழையில் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் சிலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹெத்தையம்மன் கோவில்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள பெத்தளா கிராமத்தில் கைகாரு சீமை எனப்படும் 18 கிராம மக்களுக்கு சொந்தமான புகழ்பெற்ற ஹெத்தையம்மன் கோவில் உள்ளது. படுகர் இன மக்களின் குல தெய்வ மான ஹெத்தையம்மனை நூற்றாண்டுகளாக வழிபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் இந்த கோவிலை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வர உள்ளதாக அறிவிப்பு பலகை வைக்க வந்தனர்.
இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.
உண்ணாவிரத போராட்டம்
இதையடுத்து ஹெத்தையம்மன் கோவிலை இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த நடவடிக்கையை திரும்பப் பெறவும் வலியுறுத்தி நேற்று முன் தினம் பெத்தளா கிராமமக்கள் கோவில் முன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து நேற்று காலை பெத்தளா கிராம மக்கள் ஊர்த்தலைவர் கிருஷ்ணன் தலைமையில் ஹெத்தையம்மன் கோவில் முன் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக பெத்தளா, கல்லட்டி, கேர்பன் ஆகிய கிராம மக்களும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அவர்கள், ஹெத்தையம்மன் கோவிலை இந்து அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுக்கும் நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும், அறநிலையத் துறையின் நடவடிக்கைக்கு துணையாக இருந்த சீமையின் தலைவர் நஞ்சாகவுடர் பதவி விலக வேண்டும்,
படுகர் கலாசாரத்தை சீரழிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, பக்தி பஜனைப் பாடல்களைப் பாடினர்.
பெண்கள் மயங்கினர்
பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப் போது பெண்கள் சிலர் திடீரென்று மயங்கி விழுந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த பகுதியில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. ஆனால் கொட்டும் மழையையும் பொருட்படுத்தா மல் கிராம மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், தங்களின் பிரச்சினைக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்ம். இல்லை என்றால் நாக்குபெட்டாவிற்கு உட்பட்ட 456 கிராம மக்களை ஒன்றிணைத்து மிகப் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றனர்.
போராட்டத்தில் பெத்தளா கிராம நிர்வாகிகள் சந்திரன், விஸ்வநாதன், கல்லட்டி ஊர் தலைவர் செல்வம், கேர்பன் நிர்வாகி பாலன் உள்பட பெண்கள், கிராம மக்கள் சுமார் 150- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரத போராட்டத்தையொட்டி ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
Related Tags :
Next Story