காஞ்சீபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி தலைமையில் நடந்தது.
ஆலோசனை கூட்டம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்கள், அரசு சாரா நிறுவனங்கள், தன்னார்வலர்கள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி கூறியதாவது:-
அனைத்து தன்னார்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் உறுப்பினர்களின் பெயர்கள், அலைபேசி எண்கள் ஆகிய விவரங்களை மாநில மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இடர்பாடுகளின் போது தன்னார்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் உறுப்பினர்கள் செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன என்பது குறித்தும், அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
126 இடங்கள் பாதிப்பானவை
காஞ்சீபுரம் மாவட்டத்தினை பொறுத்தவரை 126 இடங்கள் மழை வெள்ளத்தில் மிக அதிகமாக பாதிக்கப்படக்கூடிய இடங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையின் போது மீட்புப்பணிகள் உள்ளிட்டவைகளை மேற்கொள்ளும் பொருட்டு 21 மண்டல குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, இம்மண்டல குழுக்களில் 11 துறைகளை சார்ந்த அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மிக அதிகமாக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்கள், கருவுற்ற தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் விவரங்களை முன்கூட்டியே பட்டியலிட்டு, மழைக்காலங்களில் முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு அழைத்து வந்து தங்க வைக்க தயார் நிலையில் இருக்க வேண்டும்.
மருந்துகள் கொள்முதல்
அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அவசர தேவைக்கான மருந்துகள், உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்டவைகளும், கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள் உள்ளிட்ட பொருட்களையும், பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களையும் முன்கூட்டியே கொள்முதல் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், செல்போன் உயர்கோபுரங்கள் செயல்படும் நிலையில் உள்ளதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும் என்று சார்நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
Related Tags :
Next Story