மாங்காடு அருகே அடுத்தடுத்து 3 கடைகளில் பயங்கர தீ விபத்து


மாங்காடு அருகே அடுத்தடுத்து 3 கடைகளில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 12 Oct 2021 11:52 PM GMT (Updated: 12 Oct 2021 11:52 PM GMT)

மாங்காடு அருகே மரக்கடையில் திடீரென ஏற்பட்ட தீவிபத்து அடுத்தடுத்து 3 கடைகளில் பரவியதால் பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது.

பூந்தமல்லி,

மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் குன்றத்தூர்-குமணன் சாவடி சாலையில் அதே பகுதியை சேர்ந்த லிங்கம் என்பவர் மரக்கடை வைத்து நடத்தி வந்தார். இவர் இங்கிருந்த பலகைகளை சிறிது சிறிதாக பிரித்து ஏற்றுமதி செய்து வந்தார். கடையின் அருகே ஒரு ஓட்டல் மற்றும் மெக்கானிக் கடை அமைந்துள்ளது.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் மரக்கடை கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் பூந்தமல்லி, அம்பத்தூர், ஆவடி, மதுரவாயல் ஆகிய 4 பகுதியிலிருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீயை அணைத்து கொண்டிருந்தபோதே தீயானது அருகில் இருந்த ஓட்டல் மற்றும் மெக்கானிக் கடைக்கு பரவியது.

மோட்டார் சைக்கிள்கள் நாசம்

இதில் 3 கடைகளும் கொழுந்துவிட்டு எரிந்தது. இதையடுத்து, சுமார் 4 மணிநேர போராட்டத்திற்கு பின்பு கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைத்தனர். இதில் மரக்கடை முற்றிலும் தீயில் எரிந்து நாசமானதோடு, ஓட்டல், மெக்கானிக் கடையும் எரிந்தது. இந்த தீவிபத்தில் மெக்கானிக் கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 15 மோட்டார் சைக்கிள்களும், கடையின் உரிமையாளர் சீட்டு பணம் ரூ.2.30 லட்சம் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து மாங்காடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story