ஆயுத பூஜையை முன்னிட்டு கடலூரில், பூஜை பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்


ஆயுத பூஜையை முன்னிட்டு கடலூரில், பூஜை பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 13 Oct 2021 5:06 PM GMT (Updated: 13 Oct 2021 5:06 PM GMT)

ஆயுத பூஜையை முன்னிட்டு கடலூரில் பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

கடலூர், 

ஆயுத பூஜை

இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றான ஆயுத பூஜை விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சரஸ்வதிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். ஆயுதபூஜைக்கு மறுநாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. அன்று கல்வியை தொடங்கினால் சிறப்பாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. இந்நிலையில் ஆயுத பூஜையை கொண்டாட அனைவரும் ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் முன்கூட்டியே பூசணி, அவல், பொரி, கொண்டக்கடலை, பூ, பழங்கள் போன்ற பூஜைக்குரிய பொருட்களை வாங்கி வருகின்றனர். கடலூரில் உழவர் சந்தை, பான்பரி மார்க்கெட், அண்ணா மார்க்கெட் போன்றவற்றில் கூட்டம் அதிகமாக இருந்தது.

உழவர் சந்தை

கடலூர் உழவர் சந்தையில் நேற்று பூசணி, பழம், காய்கறி, வாழைத்தார் விற்பனை அதிகமாக இருந்தது. வழக்கமாக உழவர் சந்தையில் 20 முதல் 25 டன் காய்கறிகள், பழங்கள் விற்பனையாகும். ஆனால் நேற்று ஆயுத பூஜைக்காக 30 டன் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டது. வாழைத்தார் விலையும் வீழ்ச்சி அடைந்தது.
அதாவது ஒரு வாழைத்தார் முன்பு அதிகபட்சமாக ரூ.250-க்கு விற்பனை செய்யப்படும். ஆனால் நேற்று 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. அதிகபட்சமாக 100 ரூபாய்க்கு தான் விற்பனையானது. இருப்பினும் கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விற்பனைக்காக அதிக அளவில் வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டன. இதேபோல் வியாபாரிகள் சிலர்  சென்னைக்கு ஆந்திரா மாநிலத்தில் இருந்து அதிக வாழைத்தார்களை விற்பனைக்காக கொண்டு வந்ததால் விலை வீழ்ச்சியடைந்தது. 

அலைமோதிய கூட்டம்

இதனால் உள்ளூர் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வாழைத்தார்களை உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர். ஆனால் விலை வீழ்ச்சியால் நஷ்டமடைந்தனர். இதேபோல் மளிகை கடைகளிலும் பூஜைக்குரிய பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததை பார்க்க முடிந்தது. இதேபோல் சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், புவனகிரி, சேத்தியாத்தோப்பு, பெண்ணாடம், திட்டக்குடி, வடலூர், காட்டுமன்னார்கோவில், நெல்லிக்குப்பம் கடை வீதிகள் மற்றும் காய்கறி மார்க்கெட்டுகள் நேற்று கூட்டம் அலைமோதியது. 

Next Story