சாப்பாடு ருசியாக இல்லாததால் தாய், தங்கையை துப்பாக்கியால் சுட்டு கொன்ற வாலிபர்


சாப்பாடு ருசியாக இல்லாததால் தாய், தங்கையை துப்பாக்கியால் சுட்டு கொன்ற வாலிபர்
x
தினத்தந்தி 15 Oct 2021 8:35 PM GMT (Updated: 2021-10-16T02:05:38+05:30)

உத்தர கன்னட மாவட்டம் சித்தாப்புரா அருகே சாப்பாடு ருசியாக இல்லாததால் குடிபோதையில் வாலிபர் ஒருவர், தனது தாய் மற்றும் தங்கையை துப்பாக்கியால் சுட்டு கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது.

மங்களூரு:

குடிபோதையில்..

  உத்தர கன்னடா மாவட்டம் சித்தாப்புரா அருகே தொட்டமனே கிராமம் உள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பார்வதி(வயது 42). இவர தனது கணவர், மகன் மஞ்சுநாத்(24), மகள் ரம்யா(19) ஆகியோருடன் வசித்து வந்தார்.

  பார்வதியின் மகன் மஞ்சுநாத்துக்கு குடிப்பழக்கம் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதனால் அடிக்கடி அவர் குடித்துவிட்டு வந்து தனது தாய் மற்றும் தங்கையுடன் தகராறு செய்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

துப்பாக்கியால்..

  இந்த நிலையில், கடந்த 13-ந் தேதி (புதன்கிழமை) இரவு மஞ்சுநாத் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அவர் தனது தாயிடம் சாப்பாடு கேட்டுள்ளார். அதையடுத்து பார்வதி சாப்பாடு கொடுத்துள்ளார்.

  உணவை சாப்பிட்ட மஞ்சுநாத் சாம்பாரில் ருசி இல்லை என்று தாயிடம் தகராறு செய்துள்ளார். அது வாக்குவாதமாக மாறியதில் அவரது தங்கை ரம்யா, மஞ்சுநாத்தை தட்டி கேட்டுள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்த மஞ்சுநாத் வீட்டில் இருந்த நாட்டுத் துப்பாக்கியால் பார்வதி மற்றும் ரம்யாவை சுட்டுள்ளார்.

பரிதாப சாவு

  குண்டு துளைத்ததால் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக பலியானார்கள். அதற்கு முன்னதாக வெளியில் சென்றிருந்த பார்வதியின் கணவர் வீடு திரும்பியுள்ளார். அப்போது ரத்த வெள்ளத்தில் மனைவி மற்றும் மகள் பிணமாக கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

  மேலும், குடிபோதையில் கையில் நாட்டு துப்பாக்கியை வைத்திருந்த மஞ்சுநாத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் சித்தாப்புரா போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவல் அறிந்த சித்தாப்புரா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மஞ்சுநாத்தை கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பார்வதி மற்றும் ரம்யாவின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  குடிபோதையில் தாய் மற்றும் தங்கையை சுட்டுக்கொன்ற வாலிபரது செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story