முகவரி கேட்பதுபோல் நடித்து மூதாட்டியின் காதோடு கம்மல் பறிப்பு-வாலிபர் கைது
முகவரி கேட்பதுபோல் நடித்து மூதாட்டியின் காதோடு கம்மலை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தாரமங்கலம்:
முகவரி கேட்பதுபோல் நடித்து மூதாட்டியின் காதோடு கம்மலை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
முகவரி கேட்பது போல் நடிப்பு
தாரமங்கலம் பேரூராட்சி 9-வது வார்டு ஐந்து முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்பாயம்மாள் (வயது 80). இவருடைய கணவர் அருள்பிரகாசம் இறந்து விட்டார். மகன்களும் திருமணமாகி வேறு, வேறு இடங்களில் குடியிருந்து வருகின்றனர். இதனால் மூதாட்டி மட்டும் அந்த பகுதியில் வீடு ஒன்றில் தனியாக வசித்து வருகிறார்.
நேற்று மதியம் 2 மணிக்கு குப்பாயம்மாள் வீட்டு படியில் அமர்ந்து கொண்டு, ஆப்பிள் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் நடந்து வந்தார். அவர் குப்பாயம்மாளிடம், ஜோசியர் வீடு எங்கு உள்ளது என்று முகவரி கேட்பது போல் நடித்தார்.
காதோடு கம்மல் பறிப்பு
அப்போது மூதாட்டி குப்பாயம்மாள் அவருக்கு முகவரி சொல்லி கொண்டிருந்தார். திடீரென அந்த வாலிபர் குப்பாயம்மாள் இடது காதில் அணிந்திருந்த ½ பவுன் கம்மலை காதோடு பறித்தார். இந்த சம்பவத்தின் போது அவருக்கு காது கிழிந்தது. பின்னர் வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். குப்பாயம்மாள் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஏராளமானோர் திரண்டனர்.
அவர்கள் மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக தாரமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
வாலிபர் கைது
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா மற்றும் தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் ஆகியோர் அங்கு சென்று மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர். அப்போது குப்பாயம்மாள், கம்மலை பறித்த வாலிபரை நான் ஏற்கனவே பார்த்துள்ளேன் என்று கூறி அவரை பற்றிய தகவல்களையும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். மேலும் மூதாட்டி கொடுத்த தகவலின் பேரில் பாட்டப்பன்கோவில் பகுதியில் பதுங்கி இருந்த வாலிபரை பிடித்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் தாரமங்கலம் வேடப்பட்டி போயர் தெருவை சேர்ந்த ரங்கன் மகன் அய்யனார் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்ததுடன், கம்மலை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story