காரமடை அரங்கநாதர் சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை


காரமடை அரங்கநாதர் சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 16 Oct 2021 11:25 PM IST (Updated: 16 Oct 2021 11:25 PM IST)
t-max-icont-min-icon

காரமடை அரங்கநாதர் சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை

காரமடை

புரட்டாசி 5-வது சனிக்கிழமையையொட்டி காரமடை அரங்கநாதர் சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

அரங்கநாதர் சுவாமி கோவில் 

கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலும் ஒன்று. இங்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகள் மற்றும் மாசி மகத்தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். 

இதற்கிடையே புரட்டாசி மாதம் 5-வது சனிக்கிழமை என்பதால் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதை யொட்டி அதிகாலை 4 மணிக்கு அரங்கநாதருக்கு திருமஞ்சனமும், சிறப்பு அபிஷேக பூஜைகளும் நடந்தன.

பக்தர்கள் தரிசனம் 

பின்னர் காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. உற்சவரான ரங்கநாதர் சுவாமிக்கு மஞ்சள் பட்டுடுத்தி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்காக பக்தர்கள் அதிகாலை முதலே பக்தி பரவசத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்து சென்றனர். 

இரவு 9 மணி வரை பக்தர்கள் வசதிக்காக கோவில் நடை திறக்கப்பட்டு இருந்தது. தற்போது அனைத்து நாட்களிலும் கோவிலில் சென்று தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால், பக்தர்கள் மகிழ்ச்சியுடன் இந்த கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர். 

அரிசி, காய்கறிகள் தானம்

மேலும், கோவிலின் வாசலில் அமர்ந்துள்ள யாசகர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகளை படையலிட்டு பெருமானை வழிபட்டு அதில் இருந்து கிடைக்கும் பொருட்களை வைத்து சமைத்து சாப்பிட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். இதனால் ஏராளமான பக்தர்கள் யாசகர்களுக்கு படையிலிட்டு அரிசி, காய்கறிகளை தானமாக பெற்றுச்சென்றனர். 

மேலும் கொரோனா பரவலை தடுக்க காரமடை பேரூராட்சி செயல் அலுவலர் சுரேஷ்குமார் தலைமையில் துப்புறவு ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் தூய்மை பணியாளர்கள் கோவிலின் 4 ரத வீதிகள் மற்றும் கோவில் பகுதிகளில் கிருமிநாசினி தெளித்தனர். அதுபோன்று. காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Next Story