தொடர்மழையால் பாலாற்றில் அதிகரிக்கும் வெள்ளம்


தொடர்மழையால் பாலாற்றில் அதிகரிக்கும் வெள்ளம்
x
தினத்தந்தி 17 Oct 2021 12:41 PM GMT (Updated: 17 Oct 2021 12:41 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக பொன்னையில் 43.2 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மழைகாரணமாக பாலாற்றில் வெள்ளம் அதிகரித்து வருகிறது.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக பொன்னையில் 43.2 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மழைகாரணமாக பாலாற்றில் வெள்ளம் அதிகரித்து வருகிறது.

பாலாற்றில் வெள்ளம்

வேலூர் மாவட்டத்தில் பருவமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. முக்கிய நீர் ஆதாரமாக திகழும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாலாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளிலும், ஆந்திர மாநிலத்தில் மழை பெய்வதாலும் பாலாற்றில் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளை தாண்டி சீறிப்பாய்ந்து தண்ணீர் ஓடுகிறது. பாலாற்றில் செல்லும் தண்ணீரை பொதுமக்கள் பலர் வேடிக்கை பார்த்து செல்கின்றனர்.

பாலாற்றில் எப்போது வேண்டுமானாலும் திடீரென வெள்ளம் அதிகரிக்கக்கூடும் என்பதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விருதம்பட்டு பகுதியில் ஆற்றின் கரையோரம் வசிக்கும் வீட்டை சூழ்ந்தவாறு வெள்ளம் செல்கிறது. இதேபோன்று பல இடங்களில் வீடுகள் அருகே வரை வெள்ளம் செல்கிறது.

கோவிலுக்குள் தண்ணீர்

மேலும் பூட்டுத்தாக்கு பகுதியில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மழை வெள்ளத்தை பொருட்படுத்தாமல் அங்குள்ள சில பக்தர்கள் ஆற்றில் நடந்து சென்று சாமி தரிசனம் செய்கின்றனர்.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை மற்றும் இரவில் விட்டு, விட்டு மழை பெய்தது. நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை பெய்த மழையின் அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

வேலூர்-10.2, வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைபகுதி -26.2, காட்பாடி -38.5, பொன்னை - 43.2.

Next Story