ஆசிரம நிர்வாகியிடம் ரூ.3½ லட்சம் நூதன மோசடி


ஆசிரம நிர்வாகியிடம் ரூ.3½ லட்சம் நூதன மோசடி
x
தினத்தந்தி 17 Oct 2021 11:13 PM IST (Updated: 17 Oct 2021 11:13 PM IST)
t-max-icont-min-icon

மருந்து கொள்முதலில் பங்கு தொகை தருவதாக கூறி, ஆசிரம நிர்வாகியிடம் ரூ.3½ லட்சம் மோசடி செய்த நைஜீரியா நாட்டை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

தேனி: 


மருந்து கொள்முதல்
தேனி மாவட்டம் சின்னமனூர் கருங்கட்டான்குளத்தை சேர்ந்தவர் சுவாமி ரிதம்பரநந்தா (வயது 48). இவர், அனாதை ஆசிரமம் நடத்தி வருகிறார். கடந்த மே மாதம் இவருடைய செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஒரு பெண்ணின் பெயரில் குறுஞ்செய்தி வந்தது.
அதன் மூலம் அறிமுகமான நபர், தான் இங்கிலாந்தில் ஒரு தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் மருந்து கொள்முதல் மேலாளராக இருப்பதாக அறிமுகம் செய்தார். மேலும் அவர், புனேயில் டாக்டர் கருணா என்பவரிடம் புற்றுநோய்க்கு மருந்து தயாரிக்க மூலப்பொருளாக பயன்படுத்தும் எண்ணெய் இருப்பதாக தெரிவித்தார். 

அதில் 2 லிட்டர் கொள்முதல் செய்து டெல்லியில் தர பரிசோதனை செய்யும் பணிக்கு நியமிக்கப்பட்ட ஹரிசன் என்பவரிடம் கொடுத்தால் அவர் ஆயிரம் லிட்டர் கொள்முதல் செய்வதற்கான முன்பதிவு, அதற்கான பங்கு தொகையும் கொடுப்பார் என அந்த பெண் ஆசைவார்த்தை கூறினார். 
இதன் மூலம் கிடைக்கும் பங்கு தொகையால் நல்ல வருமானம் கிடைக்கும் என கூறி சுவாமி ரிதம்பரநந்தாவை சம்மதிக்க வைத்தார்.

 ரூ.3½ லட்சம் மோசடி
இதனை நம்பிய ரிதம்பரநந்தா, புனேயில் இருந்து ரூ.3½ லட்சத்துக்கு 2 லிட்டர் மருந்து மூலப்பொருள் எண்ணெய் முன்பதிவு செய்தார். அவருக்கு கூரியர் மூலம் அந்த எண்ணெய் அனுப்பி வைக்கப்பட்டது. அவர் அதை பெற்றுக் கொண்டு டெல்லிக்கு நேரில் சென்று ஹரிசனிடம் கொடுத்தார். 
ஆனால் அவர் 23 லிட்டர் கொண்டு வந்தால் தான் ஆயிரம் லிட்டருக்கான முன்பதிவு மற்றும் பங்கு தொகையை கொடுக்க முடியும் என்று கூறினார். இதனால் அவர் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறி அங்கிருந்து திரும்பி வந்துவிட்டார்.
 பின்னர் அவர் வாட்ஸ்-அப்பில் தொடர்பு கொண்ட நபருக்கு மீண்டும் தொடர்பு கொண்டார். ஆனால் அந்த எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. ஹரிசன் எண்ணையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுவாமி ரிதம்பரநந்தா, தேனி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

நைஜீரியா நாட்டுக்காரர் கைது 
விசாரணையில் நைஜீரியாவை சேர்ந்த நபர், பெண்ணின் பெயரில் வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொண்டதாக தெரிய வந்தது. மேலும் அவர் மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் கிழக்கு நளசுபரா பகுதியில் வசித்து இந்த மோசடியில் ஈடுபட்டதும் தற்போது மும்பையில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. 
இதையடுத்து தேனியில் இருந்து தனிப்படையினர் மும்பை விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த நைஜீரியாவை சேர்ந்த ஒலாடியன் மேத்யூ (43) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 மடிக்கணினி, 4 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

கைதான ஒலாடியன் மேத்யூவை போலீசார் தேனிக்கு நேற்று அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த மோசடியின் பின்னணியில் உள்ள மற்ற நபர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story