தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 17 Oct 2021 6:20 PM GMT (Updated: 17 Oct 2021 6:20 PM GMT)

நாகை, திருவாரூர், மயிலாடுதுறை பகுதிகளில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

கரடு, முரடான சாலை
மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் ரெயில்வே கேட் பகுதியில் உள்ள சாலை கரடு, முரடாக காட்சி அளிக்கிறது. இந்த சாலை வழியாக தினமும் நுற்றுகணக்கான இருசக்கர மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் கரடு முரடான சாலையால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, உயிர்பலி எதுவும் ஏற்படும் முன்பு நீடுர் ரெயில்வே கேட் பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.
-பாலா, மயிலாடுதுறை.
சாலை சீரமைக்கப்படுமா?
நாகை மாவட்டம் கங்களாஞ்சேரி பகுதியில் நாகூர் மெயின் சாலையையும், மயிலாடுதுறை மெயின் சாலையையும் இணைக்கும் கடைவீதி சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான இருசக்கர மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றனர். மேலும், திருவாரூர் மற்றும் நன்னிலம் பகுதிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் அதிகளவில் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கங்களாஞ்சேரி பகுதியில் உள்ள சாலை பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக உள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கங்களாஞ்சேரி பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், நாகை.
பகுதி நேர ரேஷன் கடை வசதி
திருவாரூர் மாவட்டம் குடவாசலை அடுத்த திருவீழிமிழலை ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் 950 ரேசன் அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர்..இதனால் ரேஷன் கடையில் எப்போதும் கூட்டம் அதிகளவில் காணப்படும். தற்போது கொரோனா காலம் என்பதால் சமூக இடைவெளி கடைபிடிப்பது மிக அவசியம் ஆகும். ஆனால், பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்கும் ஆர்வத்தில் சமூக இடைவெளி கட்டுப்பாட்டை காற்றில் பறக்கவிடுகின்றனர். அதுமட்டுமின்றி முதல் கட்டளை கிராமத்தில் இருந்து ரேஷன் கடை 5 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் ரேஷன் கடைக்கு வந்து பொருட்களை வாங்கி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி முதல்கட்டளை, மேலதண்டம், கலுங்கடி கிராம ரேஷன் அட்டைதாரர்களுக்கு பகுதி நேர ரேஷன் கடை வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், முதல்கட்டளை.
சாலையில் ஆபத்தான பள்ளம்
திருவாரூரை அடுத்த வடகரை பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் அருகே உள்ள மதுவடி பாலத்தை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள சாலை பராமரிப்பின்றி சேதமடைந்து கிடக்கிறது.மேலும், சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ஆபத்தான பள்ளம் உருவாகியுள்ளது.இதனை அறியாமல் வேகமாக வாகனங்களில் வருபவர்கள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர்.எனவே, உயிர்பலி எதுவும் ஏற்படும் முன்பு மதுவடி பாலத்தை ஒட்டி அமைந்துள்ள சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.
-சுபாஷ், வடகரை.
புதிய கான்கிரீட் பாலம் வேண்டும்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்து மேட்டுபாளையம் மற்றும் நளநல்லூரை இணைக்கும் வகையில் தட்டிபாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது, தட்டிப்பாலத்தில் உள்ள மரப்பலகைகள் சேதமடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள், முதியவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் அச்சத்துடன் தட்டிப்பாலத்தில் பயணம் செய்து வருகின்றனர்.எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு தட்டிபாலத்தை அகற்றிவிட்டு, புதிதாக கான்கிரீட் பாலம் அமைத்து தர வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-வினோத் செல்வகுமார், திருத்துறைப்பூண்டி.
சாலையில் ஓடும் கழிவுநீர்
மயிலாடுதுறை நகராட்சி அவயாம்பாள்புரம் நகரில் உள்ள சாலையில் பாதாள சாக்கடை குழி அமைக்கப்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களாக பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.இதனால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.மேலும் கழிவுநீர் சாலையை ஆக்கிரமித்து உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.அதுமட்டுமின்றி தேங்கி கிடக்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொது மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீரை அகற்றிவிட்டு பாதாள சாக்கடை குழியை சீரமைத்து தர வேண்டும் என்பதே அந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.
- பொதுமக்கள், மயிலாடுதுறை.
சாலை வசதி வேண்டும்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் பரவாக்கோட்டை கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் உள்ள வடக்குத் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் உள்ள காத்தாயி அம்மன் கோவில் எதிரே இருக்கும் சாலை அந்தப் பகுதி மக்களின் முக்கிய போக்குவரத்து சாலையாக உள்ளது. ஆனால்  கோவில் எதிரே இருக்கும் சாலை மண் சாலை என்பதால் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.மேலும் மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக சாக்கடை போல் மாறி விடுகிறது.இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி பரவாக்கோட்டை வடக்கு தெருவில் சாலை வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-சின்னா, திருவாரூர்.Next Story