தினத்தந்தி புகார் பெட்டி


புதுக்கோட்டை
x
புதுக்கோட்டை
தினத்தந்தி 18 Oct 2021 7:16 PM GMT (Updated: 18 Oct 2021 7:16 PM GMT)

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
கரூர் மாவட்டம், வெண்ணைமலை பேங்க் காலனி பஸ் நிறுத்தம் அருகே சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் அகற்றப்படுமா? என தினத்தந்தி புகார் பெட்டி பக்கத்தில் செய்தி பிரசுரிக்கப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து வந்து குப்பைகளை அகற்றி நடவடிக்கை எடுத்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள், கரூர்.

குண்டும், குழியுமான தார் சாலை 
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட எரங்குடி கிராமத்திலிருந்து கலிங்கி வரை போடப்பட்டுள்ள தார் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மழை பெய்யும் போது சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். பொதுமக்கள், எரங்குடி, திருச்சி.

நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா? 
திருச்சி மாவட்டம்,  முசிறி வட்டம், கரட்டாம்பட்டி  கிராமத்திற்கு திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து காலை 7.40 மணி அளவில் அரசு பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ்சால் பெரமங்கலம், புலிவலம், கரட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பெரிதும் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் இந்த பஸ் திடீரென நிறுத்தப்பட்டதால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
பாலா கரட்டாம்பட்டி, திருச்சி.

தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம் 
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, கேசராப்பட்டியிலிருந்து பொன்னமராவதி பஸ் நிறுத்தம் வரை தெரு நாய்கள் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த தெரு நாய்கள் சாலையில் வாகனங்கள் செல்லும்போது, திடீரென குறுக்கே வருவதால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் சாலையில் செல்லும் பொதுமக்கள், குழந்தைகளை பயமுறுத்தும் வகையில் கடிக்க வருவதுபோல் பார்ப்பதால் சாலையில் நடந்து செல்ல பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கேசராப்பட்டி, புதுக்கோட்டை.

சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பாதிப்பு
புதுக்கோட்டை மாவட்டம், கேப்பரையில் இருந்து புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் வரை சாலையின் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த  சாலையின் வழியாக வாகனங்கள் செல்ல பெரிதும் இடையூறாக உள்ளது. மேலும் ஒரே நேரத்தில் சாலையில் இரண்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் பொதுமக்கள், கேப்பரை, புதுக்கோட்டை.

பயணிகள் நிழற்குடை வேண்டும் 
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் ரெங்க பவனம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் பஸ் ஏறவரும் பயணிகள் மழையிலும், வெயிலிலும் நின்று பயணம் செய்து வருகின்றனர். மேலும் முதியவர்கள் உட்கார இடம் இன்றி பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ரெங்கபவன்  பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
கோபாலகிருஷ்ணன், ஸ்ரீரங்கம், திருச்சி.

பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள கிணறு 
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி 19-வது வார்டு மேலக்குடியிருப்பு நடுத்தெருவில் உள்ள நகராட்சி பொது கிணறு கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதாகும். இந்த கிணற்றிலிருந்து அப்பகுதி மக்கள் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த கிணற்றில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் கிடைப்பதனால் தண்ணீர் அசுத்தமாகி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், மேலக்குடியிருப்பு, அரியலூர்.

பெயர்பலகை இல்லாத தெருக்கள் 
திருச்சி மாநகராட்சி 8-வது வார்டுக்கு உட்பட்ட எஸ்.எஸ்.நகர்,  கீழதேவாதனம் என 2 தெருக்கள் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த தெருக்களுக்கு பெயர் பலகை இல்லாததால் விலாசம் தேடி வருபவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பெயர் பலகை வைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
எத்திராஜ், எஸ்.எஸ்.நகர், திருச்சி.

தெரு விளக்கு அமைக்கப்படுமா? 
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு அவ்வையார் தெரு, வடக்கு தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் சாலையில் செல்லும் வகையில் தெருவிளக்கு அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் சாலையில் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி குற்ற செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருவிளக்கு அமைத்துத்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பாப்பா, துறைமங்கலம், பெரம்பலூர். 

மயான கொட்டகை இல்லை
அரியலூர் மாவட்டம், புதுப்பாளையம் ஊராட்சியில் உள்ள கடுங்காளிகொட்டாய் கிராமத்தில் பல குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு மயான கொட்டகை இல்லாததால் மழைக்காலங்களில் இறந்தவரின் உடலை தகனம் செய்ய பெரிதும் சிரமமாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
விஸ்வநாதன், புதுப்பாளையம், அரியலூர். 

நடைமேடையில் நிறுத்தப்படும் வாகனங்கள்
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் முதல் சிங்காரத்தோப்பு வரை  பாதசாரிகளுக்காக சாலையோரத்தில் போடப்பட்டுள்ள நடைபாதை மேடையில் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் பாதசாரிகள்  சாலைகளில் விளிம்பில் நடக்க வேண்டிய நிலையும், சாலை விபத்து நேரிடும் நிலையும், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலையும் உள்ளது.  எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பார்த்திபன், திருச்சி.

சேறும், சகதியுமான சாலை 
திருச்சி மாவட்டம், கே.கே. நகர் 35-வது வார்டில் உள்ள நாகப்பா நகர் மெயின் ரோட்டில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் மழை பெய்யும்போது சேறும், சகதியுமாக உள்ளது.  இதனால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள், நடந்து செல்லும் பொதுமக்கள், முதியவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
கவியரசன், நாகப்பா நகர், திருச்சி.

வடிகால் வாய்க்கால் அமைக்கப்படுமா? 
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், மாவலிப்பட்டி கிராமத்தில் உள்ள ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் முறையாக வடிகால் வசதி இல்லாததால் மழைப்பெய்யும்போது, மழைநீர் சாலையில் சென்று தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து விடுகிறது. மேலும் சில இடங்களில் மழைநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி நிற்பதால் அதில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், மாவலிப்பட்டி, திருச்சி. 

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி 
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், மேலரசூர் கிராமத்தில் போதிய குடிநீர் இன்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி பிரசுரிக்கப்பட்டது. இதனை பார்த்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். 
பொதுமக்கள், மேலரசூர், திருச்சி. 

பயனற்ற அடிபம்பு
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் ஆமூர் ஊராட்சி கரளாவழி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள அடிபம்பு பயன்பாடு இன்றி காணப்படுகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் போதிய குடிநீர் வராததால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதியில் சரியான சாலை வசதியும், வடிகால் வசதியும் இல்லை எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கரளாவழி, திருச்சி. 

Next Story