புகார் பெட்டி
புகார் பெட்டி
ேசதமடைந்த சாலை
விருதுநகர் மாவட்டம் வில்லிபத்திரி பஞ்சாயத்துக்குட்பட்ட சின்னவள்ளிகுளத்திற்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலை போக்குவரத்துக்கு பயனற்றதாக உள்ளது. இதனால் கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன், சின்னவள்ளிகுளம்.
குப்பை தொட்டி
திருப்பரங்குன்றம் கிழக்கு நடு தெருவில் குப்பை தொட்டி இல்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் குப்பைகளை சாலையோரத்தில் வீசி செல்கின்றனர். ஆதலால் அந்த பகுதி முழுவதும் சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவுகிறது. மேலும் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தேவையான இடங்களில் குப்பை ெதாட்டி வைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- வெங்கடேஷ், திருப்பரங்குன்றம்
தெரு விளக்கு வேண்டும்
மதுரை மாநகராட்சி வார்டு எண் 17-க்கு உட்பட்ட எல்லீஸ் நகர் 1-வது பால் பூத் பஸ் ஸ்டாப் பகுதியில் தெரு விளக்கு வசதி இல்லை. இதனால் பல்வேறு அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. விபத்துகள், திருட்டு போன்றவை நடப்பதற்கு முன்பாக இந்த பகுதியில் தெரு விளக்குகள் வசதி செய்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-யோகானந்தன், எல்லீஸ்நகர்.
மாடுகள் தொல்லை
மதுரை மாநகர் 23-வது வார்டு விளாங்குடியில் தேசியநெடுஞ்சாலையில் உள்ள பஸ் ஸ்டாப்பில் தினமும் மாலையில் இருந்து நள்ளிரவு வரை மாடுகள் வந்து படுத்து கொள்கின்றன, இதனால் பயணிகளுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. சில சமயங்களில் பயணிகளை மாடு முட்டி தள்ளி விடுகிறது. இதனால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே மாலை நேரத்தில் பஸ் நிறுத்தத்தில் சுற்றித் திரியும் மாடுகளை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மயில்சாமி, புது விளாங்குடி.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி கீழ முஸ்லிம் மகால் பின்புறம் உள்ள ராமகிருஷ்ணா தெருவில், சாக்கடை கழிவுகள் தேங்கி நிற்கின்றன. இதனால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இங்கு கழிவு நீர் தேங்காமல் சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், கீழ முஸ்லிம் ெதரு.
குப்பைகளை அகற்றுவார்களா?
மதுரை மாவட்டம் சிந்தாமணி, நெடுங்குளம் பிரதான சாலையின் அருகே கிருதுமால் நதி உள்ளது. இதில் தேங்கிய கழிவுகளை அள்ளி சாலையோரத்தில் குப்பைகளாக குவிக்கப்பட்டுள்ளது. இதனால் துர்நாற்றம்வீசுவதோடு சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கடம்பவனம் அப்பளம் வியாபாரிகள் சங்கம், சிந்தாமணி.
அடிப்படை வசதிகள் வேண்டும்
சேடபட்டி ஒன்றியம் எம்.கல்லுப்பட்டி பழனியப்பா தியேட்டர் அருகில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தர நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
- பொதுமக்கள், எம்.கல்லுப்பட்டி.
ஒளிராத தெரு விளக்கு
தேவகோட்டை பள.செ. ரோடு சட்டி சாமியார் கோவில் பகுதியில் தெரு விளக்குகள் எரியவில்லை. இதனால் இந்த பகுதியில் இரவு வேளையில் நடந்து செல்வதற்கு பெண்கள் அச்சப்படுகின்றனர். இருளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.
-அருணாசலம் , தேவகோட்டை.
சாலை சீரமைக்க வேண்டும்
மதுரை தெற்கு மாரட் வீதி காஜிமார் தெரு மார்க்கெட் பகுதியில் இருந்து பாண்டி வேளாளர் தெரு முடியும் வரை சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் மழை நீர் தேங்கி நிற்கிறது. அத்துடன் சேதமடைந்த சாலையால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே இப்பகுதியில் தரமான தார்ச்சாலை அமைத்து தரவேண்டும்.
- சாகுல் ஹமீது, காஜியார் தோப்பு.
Related Tags :
Next Story