கொள்முதல் நிலையத்துக்கு திரும்பி வந்த நெல் மூடைகள்
விவசாயிகளிடம் கொள்முதல் செய்து குடோனுக்கு கொண்டு சென்ற நெல், அங்கு இடம் இல்லாததால் மீண்டும் கொள்முதல் நிலையத்துக்கே திரும்பி வந்தது. அந்த நெல்மணிகள் மழையில் நனைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
சோழவந்தான்,
விவசாயிகளிடம் கொள்முதல் செய்து குடோனுக்கு கொண்டு சென்ற நெல், அங்கு இடம் இல்லாததால் மீண்டும் கொள்முதல் நிலையத்துக்கே திரும்பி வந்தது. அந்த நெல்மணிகள் மழையில் நனைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
மழையில் நனையும் அவலம்
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கல்புளிச்சான்பட்டி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் உள்ளது.
அங்கு கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கொள்முதல் செய்யாமல் உள்ளதால் நெல் குவியல் மழையில் நனையும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக விவசாயிகள் கூறியதாவது:-
அரசு உத்தரவிட்டும், அதிகாரிகளின் மெத்தனத்தால் ெநல் கொள்முதல் செய்யப்படவில்லை. எங்களது நெல் குவியலை பராமரிக்க தினந்தோறும் செலவு செய்ய வேண்டி உள்ளது. அறுவடை செய்து 15 நாளுக்கு மேலாகியும், இதே நிலைதான் உள்ளது. 100 மூடை அளவுள்ள நெல்தான் கொள்முதல் நிலையத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட ஆயிரம் மூடை நெல் விளைநிலங்களிலும், விவசாயிகள் இடங்களிலும் வைக்கப்பட்டுள்ளன. அவை மழையில் வீணாவதற்கு முன்பு உடனடியாக கொள்முதல் செய்யப்பட வேண்டும்.
மேலும் எங்களிடம் வாங்கிய பல நெல் மூடைகளை அதிகாரிகள் குடோனுக்கு கொண்டு சென்று, அங்கு இடம் இ்ல்லாததால் மீண்டும் கொள்முதல் நிலையத்துக்கே கொண்டு வந்து, காக்க வைத்து இருக்கிறார்கள், இது எங்கள் வேதனையை அதிகப்படுத்துகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
விவசாயிகளுக்கு நஷ்டம்
இதுதொடர்பாக விக்கிரமங்கலம் ஊராட்சி மன்ற துணை தலைவர் செல்வம் என்பவர் கூறியதாவது:-
நெல் கொள்முதல் செய்யவில்லை என்று கிராம மக்கள் தெரிவித்த உடனே அதிகாரியைத் தொடர்பு கொண்டு கூறினேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வயல்களில் உள்ள நெல்லை கொள்முதல் செய்து குடோனுக்கு கொண்டு செல்கிறோம் என்று கூறிவிட்டு 10 நாட்களுக்கு பின்பு மறுபடியும் கொள்முதல் நிலையத்தில் வந்து அதிகாரிகள் கொட்டிவிட்டுச் சென்றனர். ஆகையால், மழையில் நனைந்து நெல்மணிகள் முளைக்க தொடங்கிவிட்டது.
கொள்முதல் நிலையங்களில் உள்ள மூடைகளை ஏற்றுவதற்கு தலா 6 ரூபாயும், குடோனில் இருந்து வரும் ஆட்களுக்கு மூடைக்கு 13 ரூபாய், போக்குவரத்திற்காக வாடகையாக ரூ.10 ஆயிரமும் செலவு செய்வதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே இதில், அரசு கவனம் செலுத்தி செலவுகளை குறைத்து விவசாயிகள் பயன் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story