காரில் கடத்திய 117 கிலோ குட்கா பறிமுதல்; 2 பேர் கைது
கள்ளிக்குடி பகுதியில் நடத்திய வாகன சோதனையில் காரில் கடத்திய 117 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருமங்கலம்,
கள்ளிக்குடி பகுதியில் நடத்திய வாகன சோதனையில் காரில் கடத்திய 117 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாகன சோதனை
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களை மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து மதுரை மாவட்டம் வில்லூர் பகுதிக்கு, சட்டவிரோதமாக குட்கா புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக தனிப்பிரிவு போலீஸ்காரர் பழனிவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்த தகவலை அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சூப்பிரண்டு உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் கள்ளிக்குடி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான 117 கிலோ எடைகொண்ட குட்கா புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.
2 பேர் கைது
இதனை தொடர்ந்து காரில் வந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கேசவ பெருமாள் (வயது 23), பாண்டியராஜன் (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் கொண்டுவந்த குட்கா மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர். மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக குட்கா புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் எச்சரித்துள்ளார்.
Related Tags :
Next Story