புகார் பெட்டி
புகார் பெட்டி
தண்ணீர் தொட்டி சரி செய்யப்படுமா?
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுகாதாரத்துறை பணிமனைக்கு பின் வனவிலங்குகள் பறவைகளுக்கு தாகம் தீர்க்கும் வகையில் தண்ணீர் தொட்டி கட்டப்பட்டது. ஆனால் அது தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளது. அதை மீண்டும் சரிசெய்து நீர் நிரப்பி வைத்தால் பறவைகள், விலங்குகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பரத்ராஜா, விருதுநகர்.
சேதமான பாதாள சாக்கடை மூடி
மதுரை மாநகராட்சி 35-வது வார்டு மதிச்சியம் பகுதியில் முத்து தெருவில் சோணை கோவில் முன்பாக உள்ள பாதாள சாக்கடை மூடி சேதமடைந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள், அதன்மேல் கட்டைகளை வைத்துள்ளனர். இதனால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே முத்து தெருவில் உள்ள பாதாள சாக்கடை மூடியை சிமெண்ட் சிலாப் மூலம் சரி செய்ய வேண்டும்.
சுந்தரராசன், மதிச்சியம்.
குண்டும், குழியுமான சாலை
மதுரை நகரின் மத்தியில் உள்ள பாண்டிய வெள்ளாளர் தெருவின் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் கவனித்து சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும்.
நடராஜன், பாண்டிய வெள்ளாளர் தெரு,
கூடுதல் பஸ் தேவை
மதுரை-பரமக்குடி இடையே ஒரே ஒரு இடைநில்லா பஸ் மட்டும் இயக்கப்படுகிறது. ஏற்கனவே கூடுதலாக இயக்கப்பட்ட பஸ்களை, நிறுத்திவிட்டனர். இதனால் பயணிகள் உரிய நேரத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியவில்லை. கூடுதல் இடைநில்லா பஸ்களை இயக்க வேண்டும்.
திருநிறைச்செல்வன், பரமக்குடி.
சேதமடைந்த சாலை
மேலக்கால் பிரதான சாலையில் உள்ள கோச்சடை காளை அம்பலக்காரத் தெருவில் உள்ள சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே சாலையை சரி செய்ய அதிகாரிகள் முன்வருவார்களா?.
டி.ராஜன், கோச்சடை.
பஸ் நிறுத்தத்தில் கான்கிரீட் தளம்
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா கிருஷ்ணன்கோவில் கடைத்தெருவில் உள்ள பஸ் நிறுத்தம் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இந்த பஸ் நிறுத்தத்தை பயன்படுத்தி பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பயணிகள் இங்கு வந்து காத்திருப்பது வழக்கம். எனவே அதிகாரிகள் கான்கிரீட் தளம் அமைத்து கொடுக்க முன்வரவேண்டும். அப்பகுதி மக்கள், கிருஷ்ணன்கோவில்.
நீச்சல்குளம் தேவை
மேலூர், திருமங்கலம் மற்றும் உசிலம்பட்டி ஆகிய நகராட்சி பகுதிகளில் அரசு சார்பில் நீச்சல்குளம் கட்டித்தரப்படவில்லை. அதனால் இந்த நகராட்சிகளில் உள்ள மாணவர்கள், வீரர்கள், மதுரை போன்ற நகரங்களுக்கு சென்று நீச்சல் பயிற்சி பெற்று போட்டிகளில் பங்கேற்க வேண்டியுள்ளது. இதனால் அவர்களுக்கு காலமும் மற்றும் பண விரயமும் ஏற்படுகிறது. எனவே மேற்கண்ட நகராட்சிகளின் சார்பில் நீச்சல் குளங்களை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
முத்துகிருஷ்ணன், கே.புதூர், மதுரை.
அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் தேவை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா உலகம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் பல ஆண்டுகளாக டாக்டர்களே இல்லாத நிலை உள்ளது. இதனால் நோயாளிகளை 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொன்னமராவதி அரசு ஆஸ்பத்திரிக்கோ அல்லது 48 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கோ அழைத்துச்செல்ல வேண்டிய நிைல உள்ளது. எனவே உலகம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனாட்சிசுந்தரம், உலகம்பட்டி.
தெருவிளக்கு பொருத்துவார்களா?
மதுரை 56-வது வார்டு அழகர் நகர், சின்ன அனுப்பானடி பகுதியில் மின்கம்பங்கள் இருந்தும் பல நாட்களாக தெருவிளக்குகள் பொருத்தப்படவில்லை. அப்பகுதி முழுவதும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. தெருவிளக்கு இல்லாததால் அந்த பகுதி இருள் மயமாக காட்சியளிக்கிறது. எனவே தெருவிளக்கு பொருத்த நடவடிக்கை எடுப்பார்களா? கே.சூரியநாராயணா, அழகர்நகர்.
Related Tags :
Next Story