‘இல்லம் தேடி கல்வி திட்டம்’ 9 மாவட்டங்களில் தொடக்கம்
இல்லம் தேடி கல்வி திட்டம் மதுரை உள்பட 9 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்
மதுரை,
இல்லம் தேடி கல்வி திட்டம் மதுரை உள்பட 9 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
ரூ.200 கோடி நிதி
மதுரையில் கல்வி கடன் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் கடந்த 1½ ஆண்டுகளாக செயல்படவில்லை. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த கல்வி மாணவர்களின் திறனை வளர்ப்பதற்கு போதாது என்று முதல்-அமைச்சரின் பொருளாதார ஆலோசனை நிபுணர்கள் குழுவும், சட்டமன்ற உறுப்பினர்களும் கருத்து தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு ஏற்பட்டு இருக்கும் கற்றல் இழப்புகள் மற்றும் உளவியல் சிக்கல்கள் ஆகியவற்றை சரிசெய்திட மாபெரும் கற்பித்தல் வாசிப்பு இயக்கம் தமிழகமெங்கும் செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் நான் அறிவித்து இருந்தேன். முதல்கட்டமாக இந்த திட்டத்திற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
தன்னார்வலர்கள்
கொரோனாவால் கற்பித்தல் ஏதும் இல்லாமல், தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மொத்தம் 30 லட்சம் மாணவர்கள் இருக்கின்றனர். அவர்களில் 20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் என்ற அடிப்படையில் 1½ லட்சம் தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். அதற்கான இணையதளம் மூலம் அவர்கள் விண்ணப்பிக்கலாம்.
முதல்கட்டமாக மதுரை உள்பட 9 மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வி என்ற இந்த திட்டம் சோதனை அடிப்படையில் இன்று (நேற்று) முதல் தொடங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். அதற்கு தேவையான அனைத்து நிதியும் ஒதுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story