மதுரை ஐகோர்ட்டில் திருச்சி கலெக்டர் ஆஜர்
அவமதிப்பு வழக்கில் மதுரை ஐகோர்ட்டில் திருச்சி கலெக்டர் ஆஜரானார்.
மதுரை,
திருச்சி மாவட்டம் தேனூரை சேர்ந்த திருப்பதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
திருச்சி மாவட்டம் தேனூர் கிராமம் போலம்பட்டியில் கால்வாயை ஆக்கிரமித்து சாலை அமைக்கும் பணிகளுக்கு வட்டார வளர்ச்சி அதிகாரி அனுமதி அளித்தார். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தோம். இதையடுத்து சாலை பணிகள் நிறுத்தப்பட்டன. ஆனால் கால்வாயை ஆக்கிரமித்து அமைத்த ஒருபகுதி சாலையை அகற்றவில்லை. சாலையை முழுமையாக அகற்றி, கால்வாயை மீட்க உத்தரவிடும்படி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரர் புகார் மனுவின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து, அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது. ஆனாலும் சாலையை அகற்றவில்லை. எனவே கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாத திருச்சி கலெக்டர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இதை விசாரித்த ஐகோர்ட்டு, இதுபற்றி விளக்கம் அளிக்க திருச்சி மாவட்ட கலெக்டர் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு நீதிபதிகள் முன்பு ஆஜரானார். பின்னர் போலம்பட்டி மழைநீர் வடிகால் பகுதியில் போடப்பட்ட சாலை அகற்றப்பட்டு பழைய நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தனர்.
Related Tags :
Next Story