கோவில் நகைகளை உருக்கும் திட்டம் ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது-மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி


கோவில் நகைகளை உருக்கும் திட்டம் ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது-மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி
x
தினத்தந்தி 22 Oct 2021 1:30 AM IST (Updated: 22 Oct 2021 1:30 AM IST)
t-max-icont-min-icon

கோவில் நகைகளை உருக்கும் திட்டம் ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது என மதுரையில் நடந்த இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தின் போது மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.

மதுரை, 

கோவில் நகைகளை உருக்கும் திட்டம் ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது என மதுரையில் நடந்த இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தின் போது மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.

ஆர்ப்பாட்டம்

கோவில் நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி, வங்கிகளில் டெபாசிட் செய்யப்போவதாக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், திட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும் இந்து முன்னணி சார்பில் மீனாட்சி அம்மன் கோவில் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து போலீசார் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிலும் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இந்தநிலையில் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று காலை முதல் மீனாட்சி அம்மன் கோவில் அருகே திரண்டனர். மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் ஊர்வலமாகச் சென்று அம்மன் சன்னதி பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆர்ப்பாட்டத்தின் போது கோவில் நகைககளை உருக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், பக்தர்கள் நேர்த்திக்கடனாக அளித்த நகைகளை அரசு எடுக்கக்கூடாது என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

தீர்ப்புக்கு எதிரானது

இதனை தொடர்ந்து காடேஸ்வரா சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவில் நகைகளை உருக்குவது குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சரின் அறிவிப்பு சட்டவிரோதமானது. மேலும் ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது. கடந்த 60 ஆண்டுகளாக கோவில்களின் வரவு-செலவு கணக்குகளை வழங்கவில்லை என 2015-ல் ஐகோர்ட்டு தெரிவித்திருந்தது. ஆனாலும் தற்போது வரை அரசுத்தரப்பில் எவ்வித கணக்குகளும் சமர்ப்பிக்கப்படாதது ஏன்?.
1977-ல் கோவில் நகைகள் உருக்கப்பட்டு வங்கியில் இருப்புத்தொகை வைக்கப்பட்டது என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அப்படி என்றால் அதுகுறித்த வரவு-செலவு கணக்குகளை அரசு தெரிவிக்க வேண்டும்.

கோவில் நிலங்கள்

ஊழல் செய்யவே தங்கத்தை உருக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை இந்து முன்னணி தடுத்து நிறுத்தும். கோவில் தங்கத்தை உருக்குவதற்கு வேகம் காட்டும் அரசு, கோவில் நிலங்களை கண்டுபிடித்து மீட்கும் பணியில் தீவிரம் காட்ட வேண்டும்.
தி.மு.க. அரசு இந்துக்களுக்கு மட்டும் எதிராக செயல்படுகிறது. மீனாட்சி அம்மன் கோவிலில் போலிச்சான்றிதழ்கள் வழங்கி பணியில் உள்ளவர்கள் மீது அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story