புதூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைச்சர்கள் ஆய்வு
புதூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். அப்போது தமிழகத்திலேயே இங்கு தான் அதிக மாணவர்கள் படிப்பதாக பெருமிதத்துடன் அமைச்சர் கணேசன் கூறினார்.
மதுரை,
புதூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். அப்போது தமிழகத்திலேயே இங்கு தான் அதிக மாணவர்கள் படிப்பதாக பெருமிதத்துடன் அமைச்சர் கணேசன் கூறினார்.
90 நிலையங்கள்
மதுரை புதூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தொழிலாளர் நலன் திறன் மேம்பட்டுத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.
பின்னர் அமைச்சர் கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் 90 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றது. அதில் 25 ஆயிரம் பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த நிலையங்களில் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறேன். இதுவரை 30 நிலையங்களை ஆய்வு செய்து இருக்கிறேன். இந்த அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்கின்ற இளைஞர்களுக்கும், படித்த வேலைக்காக காத்திருக்கக் கூடிய இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்பது தான் தமிழக அரசின் நோக்கம். தமிழ்நாட்டிலேயே அதிகமான மாணவர்கள் மதுரை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தான் படிக்கின்றனர். இது பெருமைப்பட வேண்டிய விஷயம். அதற்கு அடுத்தபடியாக அம்பத்தூர், சென்னை மற்றும் செங்கல்பட்டில் இயங்கி வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். தமிழக அரசின் நோக்கம் ஒவ்வொரு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திலும் குறைந்தபட்சம் 1,000 மாணவர்களாவது படிக்க வேண்டும் என்பதாகும். அதன் அடிப்படையில் ஆண்டிற்கு 1 லட்சம் மாணவர்கள் கல்வி பெற்றால் அந்த மாணவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்றவாறு அரசுத்துறையிலோ அல்லது தனியார் துறையிலோ படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும்.
80 சதவீதம்
ஆண்டிப்பட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை ஆய்வு செய்த பொழுது அங்கு அதிகமான பெண்கள் ஆர்வமுடன் டெக்ஸ்டைல்ஸ் தொடர்பான பயிற்சி பெற்று வருவது தெரிந்தது. அதே போல் எந்தெந்த இடங்களில், எந்தெந்த பகுதிகளில் எந்த பயிற்சியை கற்றுகொள்ள முக்கியத்துவம் அதிகமாக இருக்கின்றதோ, மாணவர்கள் எந்த பயிற்சியில் சேர்ந்து படிக்க ஆர்வமாக இருக்கின்றார்களோ அவற்றை புதியதாக கொண்டு வர வேண்டும். தற்காலத்திற்கு ஏற்றவாறு புதிய பயிற்சிகளை உருவாக்கி பயிற்சி அளிக்க வேண்டும். 50, 60 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடங்களை கண்டறிந்து புனரமைக்கப்படும். புதூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களில் இந்த ஆண்டில் 80 சதவீதம் மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆய்வின் போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வீரராகவ ராவ், கலெக்டர் அனிஷ் சேகர், மண்டல இணை இயக்குனர் (பயிற்சி) அமலா ரக்சலின், மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) சந்திரன், உதவி இயக்குனர் (வேலைவாய்ப்பு) திரு.கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story