துப்பாக்கியை காட்டி வழிப்பறி செய்தவர் கைது


துப்பாக்கியை காட்டி வழிப்பறி செய்தவர் கைது
x
தினத்தந்தி 22 Oct 2021 8:04 PM GMT (Updated: 22 Oct 2021 8:04 PM GMT)

மதுரையில் துப்பாக்கியை காட்டி வழிப்பறி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

மதுரை,

மதுரையில் துப்பாக்கியை காட்டி வழிப்பறி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

ஆட்டோ டிரைவர்

மதுரை நகரில் நடக்கும் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனே கைது செய்ய போலீஸ் கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாநகர சட்டம் ஒழுங்கு போலீஸ் துணை கமி‌ஷனர் தங்கதுரை ஆலோசனையின் பேரில், திலகர் திடல் உதவி கமி‌ஷனர் ரமேஷ் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் பழைய விளாங்குடியை சேர்ந்த ஷேர்ஆட்டோ டிரைவர் ஹரிஹரசுதன் (வயது 22), நேற்று முன்தினம் இரவு அரசரடி காய்கறி மார்க்கெட்டுக்கு வந்தார். அப்போது அவரை வாலிபர் ஒருவர் தடுத்து நிறுத்தி அவரிடமிருந்த பணத்தை கொடுக்குமாறு மிரட்டினார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

துப்பாக்கியை காட்டி மிரட்டல்

திடீரென்று அந்த வாலிபர் துப்பாக்கியை எடுத்து காட்டி மிரட்டி பணத்தை கொடுக்கவில்லை என்றால் சுட்டு விடுவதாக மிரட்டினார். இதனால் பயந்து போன ஹரிகரசுதன் தான் வைத்திருந்த ரூ.1,100-ஐ அவரிடம் கொடுத்தார். பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இது குறித்து ஹரிகரசுதன் எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் உதவி கமிஷனர் ரமேஷ், இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையிலான போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். அதில் துப்பாக்கியை காட்டி மிரட்டியது சம்மட்டிபுரத்தை சேர்ந்த சரத்குமார் (30) என்பது தெரியவந்தது.

கைது

இதை தொடர்ந்து போலீசார் அவரை தேடி வந்தனர். அப்போது சம்மட்டிபுரம் பகுதியில் பதுங்கியிருந்த சரத்குமாரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து நாட்டு கைத்துப்பாக்கி, ஒரு தோட்டா போன்றவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இவர் மீது 2 கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
மேலும் சரத்குமாருக்கு இந்த நாட்டு கைத்துப்பாக்கி எப்படி வந்தது, அவர் யாரிடம் அதனை வாங்கினார்.அதை வைத்து வேறு ஏதாவது குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளாரா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் விரைந்து செயல்பட்டு சரத்குமாரை கைது செய்த போலீசாரை போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.

Next Story