பள்ளிகளில் நேரடி வகுப்பு நடத்துவது தொடர்பாக அரசிடம் மனு அளிக்கலாம்-வழக்கு தொடர்ந்தவருக்கு மதுரை ஐகோர்ட்டு அறிவுரை
பள்ளிகளில் நேரடி வகுப்பு நடத்துவது தொடர்பாக அரசிடம் மனு அளிக்கலாம் என்று வழக்கு தொடர்ந்தவருக்கு மதுரை ஐகோர்ட்டு அறிவுரை கூறி உள்ளது.
மதுரை,
நெல்லையை சேர்ந்த அப்துல் வஹாபுதீன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் ஆன்லைன் வகுப்புகளும் நடைபெற்று வருகிறது.18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. அதே நேரத்தில் கொரோனா நோய் தொற்றின் 3-வது அலை அதிக அளவில் குழந்தைகளை பாதிக்கும் என கூறப்படுகிறது.
சில பள்ளிகளில் மாணவர்களை கண்டிப்பாக நேரடி வகுப்பிற்கு வரவேண்டும் என கூறுகின்றனர். மேலும் சில பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சரியாக பின்பற்றுவது இல்லை. எனவே 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களை நேரடி வகுப்புக்கு கட்டாயப்படுத்தக்கூடாது என உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மாணவர்கள் நேரடி வகுப்பில் பங்கேற்பது கட்டாயமில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தற்போது மகிழ்ச்சியாக பள்ளிக்கு சென்று வருகின்றனர். எந்த பிரச்சினையும் இன்றி வகுப்புகள் நடக்கின்றன என்று தெரிவித்தார்.
பின்னர் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் ஆஜரான வக்கீல், "மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகம். எனவே பள்ளிகள் திறக்க தடை விதிக்கக் கூடாது" என வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் விரும்பினால் தமிழக அரசிடம் புதிதாக மனு அளிக்கலாம் எனக்கூறி வழக்கை நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.
----
Related Tags :
Next Story