கோலார் தங்கவயலில் ஓட, ஓட விரட்டி ரவுடி படுகொலை


கோலார் தங்கவயலில் ஓட, ஓட விரட்டி ரவுடி படுகொலை
x
தினத்தந்தி 24 Oct 2021 9:19 PM GMT (Updated: 24 Oct 2021 9:19 PM GMT)

கோலார் தங்கவயலில் ரவுடியை ஓட, ஓட விரட்டி படுகொலை செய்த மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கோலார் தங்கவயல்:

ரவுடி

  கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை போலீஸ் எல்லைக்குபட்ட ஈ.டி.பிளாக் பகுதியை சோ்ந்தவர் ராஜ்குமார் (வயது 32). இவருடைய பெயர் ரவுடி பட்டியலில் உள்ளது. இவர் அந்தப்பகுதியில் ரவுடியாக வலம் வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு ராஜ்குமார் தனது குடும்பத்துடன் காரில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றார். பின்னர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு குடும்பத்தினரை வீட்டில் விட்டு காரில் அவர் வெளியே சென்றார்.

  ராஜ்குமாருடன் அவருடைய கூட்டாளிகளான அஜய், சரவணன், சுனில் ஆகியோரும் சென்றனர். அப்போது சிறிது தூரம் சென்றதும் ராஜ்குமாரின் காரை 10 பேர் கும்பல் வழிமறித்தது.

கொடூர கொலை

  அப்போது அந்த கும்பல், ராஜ்குமாரை காரில் இருந்து இறக்கி தாக்கியது. மேலும் ஆயுதங்களால் அவரை தாக்க முயன்றனர். இதனால் அவர்களிடம் இருந்து தப்பிக்க ராஜ்குமார் மற்றும் அவருடைய கூட்டாளிகள் அங்கிருந்து ஓடினார்கள். அப்போது ராஜ்குமாரை மர்மகும்பல் ஓட, ஓட விரட்டி சென்று கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினார்கள்.

  ஒரு கட்டத்தில் ராஜ்குமாரை சுற்றி வளைத்த மர்மகும்பல், அவரை ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினார்கள். அத்துடன் அவருடைய முகத்திலும் கத்தியால் குத்தி சிதைத்தனர். இந்த கொடூர தாக்குதலில் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவருடைய கூட்டாளிகளான அஜய், சரவணன், சுனில் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

3 பேர் படுகாயம்

  இதுபற்றிய தகவல் அறிந்ததும் ராபர்ட்சன்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது, முகம் சிதைக்கப்பட்ட நிலையில் ரவுடி ராஜ்குமார் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த 3 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை ெபற்று வருகிறார்கள்.

  இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஈ.டி.பிளாக்கை சேர்ந்த மற்றொரு ரவுடியான ஜெயகாந்தன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் இந்த கொடூர கொலை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.

தனிப்படை அமைப்பு

  முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து போலீசார், இந்த கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர். இதுகுறித்து ராபர்ட்சன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கோலார் தங்கவயலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  கோலார் தங்கவயலில் இருந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மாற்றப்படுவதாக கூறப்பட்டு வரும் நிலையில், இந்த கொடூர கொலை சம்பவத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Next Story